பெங்களூரு: கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.எம்.இப்ராகிம் இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ)வில் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்துள்ளதுடன் கர்நாடக மாநிலத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.
இந்நிலையில் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தேவகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக சி.எம்.இப்ராகிம் குற்றம்சாட்டியதுடன் கட்சி தலைமையின் முடிவுக்கு கடுமையான விமர்சனம் செய்தார். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை ரத்து செய்யும்படி சி.எம்.இப்ராகிம், பெங்களூரு 26வது சிசிஎச் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவகவுடா,குமாரசாமி ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் வரும் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.