பெங்களூரு: பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் பலியான மகனின் கல்லறையை கட்டிப்பிடித்து அழுத தந்தையின் வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடுவதற்காக சின்னசாமி மைதானத்தின் வாயிலில் கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த கோர சம்பவத்தில், இறுதி ஆண்டு பொறியியல் மாணவரான 21 வயது பூமிக் லக்ஷ்மணும் உயிரிழந்தார். அவரது தந்தை பி.டி.லக்ஷ்மண், தனது ஒரே மகனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து துண்டு துண்டாக வெட்ட வேண்டாம் என்றும், உடலை அப்படியே தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பூமிக் லக்ஷ்மணின் தந்தை பி.டி.லக்ஷ்மண், தனது மகனின் கல்லறையை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, இந்தத் துயரத்தின் வலியை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தனது சொந்த ஊரான ஹாசன் மாவட்டத்தில் உள்ள மகனின் கல்லறையில், ‘என் மகனுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. அவனுக்காக நான் வாங்கிய நிலத்தில்தான் இன்று அவனது நினைவிடம் கட்டப்பட்டுள்ளது’ என்று கூறி அவர் கதறி அழும் காட்சி காண்போரை கலங்க வைக்கிறது.
இந்த வீடியோவை கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பெங்களூரு காவல் ஆணையர் உட்பட ஐந்து காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் மற்றும் மாநில உளவுத்துறை தலைவர் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.