ராவல்பிண்டி: பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பிற்பகல் 2மணிக்கு தான் தொடங்கியது. அதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் பாக் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களை இழந்து 41ஓவரில் 158ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த சவுத் ஷக்கீல் 57, முகமது ரிஸ்வான் 24ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.
இருவரும் பொறுப்பாக விளையாட ரிஸ்வான் 64பந்துகளில் அரைசதம் விளாசினார்.உணவு இடைவேளையின் போது இருவரும் சதத்தை நெருங்கியிருந்த நிலையில் பாக் 4 விக்கெட் இழப்புக்கு 256ரன் எடுத்திருந்தது. பின்னர் ரிஸ்வான், ஷக்கீல் ஆகியோர் அடுத்தடுத்து தங்களின் 3வது டெஸ்ட் சதத்தை விளாசினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 240ரன் குவித்தனர். சவுத் ஷகீல் 141(261 பந்து, 9 பவுண்டரி) எடுத்திருந்த போது ஹசன் மிராஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசிடம் பிடிப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகா சல்மான் 19 ரன்னில் வெளியேறினார்.
அடுத்த சில ஒவர்களில் பாக் 113 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன் எடுத்திருந்தபோது திடீரென டிக்ளேர் செய்தது. அப்போது ரிஸ்வான் 171 (239 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), ஷாகின் ஷா அப்ரிடி 29 (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்)ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்க தேசம் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 12ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 27ரன் எடுத்தது. களத்தில் உள்ள ஹசன் 11, இஸ்லாம் 12ரன்னுடன் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.