கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ நடத்திய 12 மணி நேர பொது பந்த் பிசுபிசுத்தது. வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயங்கியதாலும், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்பட்டதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. கடைகளை மூட கட்டாயப்படுத்தி பாஜ தலைவர்களை போலீசார் கைது செய்தனர். பல இடங்களில் பாஜ, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அடக்குமுறையை கண்டித்து 12 மணி நேர ‘பங்களா பந்த்’ போராட்டம் நடத்துவதாக பாஜ அறிவித்தது. அதன்படி, பந்த் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. பந்த் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க மம்தா அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தது. பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அரசு, தனியார் பஸ், ஆட்டோ, டாக்ஸிகள் வழக்கம் போல் இயங்கின. பஸ் டிரைவர்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்து பஸ்களை இயக்கினர்.
அரசு, தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்ததால் பலர் நேரில் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு அலுவலகங்கள் வழக்கமான ஊழியர்களுடன் இயங்கியது. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தாலும் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர். கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தன. கொல்கத்தாவின் அலிபுர்துவாரில், பாஜவினர் சாலையை மறிக்க முயன்றதால், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
கரியாஹட் மற்றும் ஷியாம்பஜார் பகுதிகளில் கடைகளை மூடுமாறு வர்த்தகர்களை கட்டாயப்படுத்திய மறியலில் ஈடுபட முயன்றதாக பாஜ முன்னாள் எம்பிக்கள் ரூபா கங்குலி, லாக்கெட் சட்டர்ஜி, மாநிலங்களவை எம்பி சாமிக் பட்டர்ஜி, எம்எல்ஏ அக்னிமித்ரா பால் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதே போல, மாநிலம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு வற்புறுத்திய பல பாஜ நிர்வாகிகள் கைதாகினர். கொல்கத்தாவின் பாகுய்ஹாட்டியில் மாநில பாஜ தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜ தொண்டர்கள் ஊர்வலம் நடத்தினர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஷியாம்பஜார் மற்றும் விப்ரோ மோர் ஆகிய இடங்களிலும் பாஜ தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் செய்ய முயன்ற அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சுமார் 49 ரயில் நிலையங்களில் பாஜ தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கவில்லை. வடக்கு 24 பர்கானாசில் உள்ள பாரக்பூர் ரயில் நிலையத்தில் பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பதற்றம் நிலவியது. மால்டா பகுதியிலும் இருகட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்பாராவில், பாஜ நிர்வாகிகள் 2 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்களின் கார் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சில மோதல் சம்பவங்கள் நடந்தாலும், பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கவில்லை.
* பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை
திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி நிறுவன தினத்தையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது ஆரம்பத்தில் இருந்தே அனுதாபத்துடன் இருந்தேன். சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்கள் வலி எங்களுக்குப் புரிகிறது. ஆனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் 20 நாட்களாக போராட்டம் நடத்தும் ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பாலியல் பலாத்கார சம்பவங்களை எனது அரசு பொறுத்துக் கொள்ளாது.
அடுத்த வாரமே சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி, பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம். அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலோ அல்லது தாமதம் செய்தாலோ ராஜ்பவன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்துவோம். இதே போல, பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் சனிக்கிழமை முதல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும்.
பெண் டாக்டர் கொலை வழக்கை கொல்கத்தா போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி 16 நாட்கள் ஆகிவிட்டது. நீதி எங்கே? மருத்துவரின் சடலத்தை வைத்து அரசியல் லாபம் தேட பாஜ பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் சாமானிய மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்த பாஜ முயற்சிக்கிறது. அவர்கள் மேற்கு வங்கத்தை இழிவுபடுத்த விரும்புகிறார்கள். பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்காத வகையில் விசாரணையைத் தடம் புரளச் செய்ய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். மேலும் ஏஐயை பயன்படுத்தி பாஜ பெரிய அளவிலான சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறது. இது சமூக அமைதியின்மையை ஏற்படுத்துகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
* பந்த் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பாஜவின் பந்த் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, சஞ்சய் தாஸ் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. இதற்கிடையே சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் உறுப்பினர் பொறுப்பை இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.