Tuesday, December 5, 2023
Home » நன்மைகளை தரும் நவராத்திரி விழா

நன்மைகளை தரும் நவராத்திரி விழா

by Kalaivani Saravanan

15-10-2023 முதல் 24-10-2023 வரை நவராத்திரி

நவராத்திரி கொண்டாடும் இந்த வேளையில் நவ நவங்கள் (புதிது புதிதான) என நன்மைகளை அள்ளித் தரும் “நவராத்திரி தேவியர்” குறித்து காண்போம்.

நவராத்திரி சிறப்பு

நவராத்திரி வந்துவிட்டது. மகாளய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவபூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயணம் என்றால் இரவு. இது தட்சிணாயணத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. அடுத்து இரவில் கொண்டாடப்படும் பண்டிகை. புதுமையான பலன் தரும் பண்டிகை. ஒன்பது நாள் இரவுக் காலம் கொண்டாடும் பண்டிகை. இவையெல்லாம் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்.

பெண்மையைப் போற்றும் பண்டிகை

சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பிரசித்தமாக இருக்கும். சில பண்டிகைகள் நாடு முழுவதும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை இந்தியாவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்மையை சக்தியாகக் கொண்டாடும் நமது சமய மரபு, சிவராத்திரியை ஒரு நாளைக்கு வைத்துவிட்டு, நவராத்திரியை ஒன்பது நாட்களுக்கு என்று வைத்து வணங்கிப் போற்றிய தத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்வியின் பெருமைகளையும், கலைகளின் பெருமைகளையும், குணத்தின் சிறப்பையும், ஞானத்தின் அருமையையும் பேசும் பண்டிகை இது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன;
நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன. ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக் கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே விருப்பம் இருந்தால் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும் என்பதுதான். அதுதான் சாரதா நவராத்திரியின் சிறப்பு.

மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகை

இந்த உலகம், அண்டாதி அண்டங்கள் எல்லாம் இணைத்து சக்தியால் உருவானது. அண்டங்களை இயக்குவது இந்த பிரபஞ்ச சக்தி (Power of Universe). எல்லாவற்றையும் இயக்குவது மட்டுமல்ல எல்லாவற்றையும் தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான். இதை உணர்ந்து கொண்டாடினால், நவராத்திரியின் விசேஷமான பலனை, நம் மனிதகுலம் முழுமையாகப் பெறும். மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் முப்பெரும் தேவியர்களை (வீரம், செல்வம், ஞானம்) வணங்குகின்றோம்.

முப்பெரும் ஆற்றலும் இணைந்தால் கிடைக்கும் மகத்தான வெற்றியின் குறியீடாக தசமி அன்று “விஜயதசமி” விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம், அந்த மனிதன் ஒரு உயிராக, மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் படிப்படியாக மலர்வதை குறித்ததாகவே (progressive) இருக்கிறது, பத்தாவது நாளான விஜயதசமி. பூரணமாக மலர்ந்து வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது. இனி ஒவ்வொரு தேவியின் சிறப்பையும்தத்துவத்தையும் சிந்திப்போம்.

துக்க நிவாரணி காமாட்சி

முதல் மூன்று நாட்கள் மலைமகளான பராசக்திக்கு உரிய நாட்கள் ஆகும்.
`மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி’
துக்க நிவாரணி என்ற வார்த்தையை துர்க்கையின்

பேரருளாகச் சொல்வார்கள். அச்சம் துன்பத்தைத் தரும். கவலையைத் தரும். ஆற்றலைக் குறைக்கும். அமைதியை சிதைக்கும். ஆனால், ஒடிந்த மனதை நிமிர்த்தி கம்பீரமாகச் செயல்பட வைக்கும் சக்தியைத் தருபவள் துர்காதேவி. ஆற்றலின் மொத்த வடிவமான சக்தியை முதல் மூன்று நாட்கள் மனதில் தியானித்து வணங்க வேண்டும்.

காலம் காலமாக இருக்கும் வழிபாடு

துர்க்கை வழிபாடு என்பது காலம் காலமாக இருப்பது. சங்க இலக்கிய காலத்திலிருந்து பின்பற்றப்படும் வழிபாடு. கொற்றவை வழிபாடு என்பது பாலை நிறத்திற்கு உரியது.

`மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கொற்றவை அல்லது காளி என்று பல பெயர்கள் இந்த தெய்வத்திற்கு உண்டு. அதில் ஒரு பெயர் ஸ்கந்த மாதா. முருகனுக்கு தாய். முருகன் சூரசம்காரம் செய்த போது வேல் தந்தவள் அல்லவா. எனவே கூர்மையான மதியும் எதிரிகளை வெல்லும் (பகையை வெல்லும்) ஆற்றலையும் பெற, துர்க்கையின் அருள் வேண்டும்.

அம்மன் வழிபாட்டில் ஆர்வம்

நாடெங்கும் துர்க்கைக்கு ஆலயங்கள் உண்டு. சக்தி வழிபாட்டை அறுசமய வழிபாட்டில் ஒன்றாக வைத்தார்கள். சாக்த வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டை ஆயிரக்கணக்கான மக்கள், மற்ற வழிபாட்டைவிட அதீத ஆர்வத்துடன் செய்கிறார்கள். அம்மன் வழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும், செயலாற்றலையும் தருகிறது. தட்சிணாயணத்தின் முதல் மாதமான ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி வைத்தார்கள்.

இல்லாததை இருப்பதாக மாற்றும்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு அதாவது சக்தி வழிபாடு. அது என்ன ராத்திரி வழிபாடு? பொதுவாகவே “ராத்திரி” என்பது இருட்டைக் குறிக்கும். இருள் என்பது புத்தியின் மயக்க நிலையைக் குறிக்கும். ‘‘நெஞ்சகம் இருளானால் வஞ்சக எண்ணங்கள் தானே தோன்றும்’’ என்பார்கள். இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது.

இந்த அஞ்ஞானம் என்பது தனியான ஒரு பொருளோ, தத்துவமோ அல்ல. ஒளி இன்மை, அறிவின்மையின் பிரதிபலிப்புதான் அஞ்ஞானம். இருப்பது என்பது ஒளி. இல்லாதது என்பது இருள். இல்லாததை இருப்பதாக மாற்றுவதற்குத் தான் நவராத்திரி வழிபாடு. இதில் சக்தியின் ஆற்றலை (ஒளியை) வணங்குகின்றோம். ஆற்றலைப் பெறுகின்றோம்.

மகிஷாசுர மர்த்தனி

“மகிஷாசுர மர்த்தனி” என்று துர்க்கையைக் கொண்டாடுகிறோம். `மகிஷம்’ என்றால் எருமை. எருமை தலையோடு கூடிய அசுரனை, சிங்க வாகனம் ஏறி அழித்தவள் பராசக்தி. இது புராணக் கதையாக இருப்பினும் இதன் தத்துவ சிறப்பு அபாரமானது. எருமையின் நிறம் கருப்பு. (ராத்திரி) எருமையின் குணம் தாமசம் (தமஸ்). மனிதர்களிடம் தெளிவின்மையாகிய இருட்டும் தமஸ் குணமும் மிஞ்சி நிற்கும் போது அவன் ஆற்றல் நேர் வழியில் செல்லாது. துர்குணங்களே மிகும்.

தமஸ் குணம், ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும். தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது.

தமோ குணப் பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிக்கின்றது. தமோ குணத்தினால் உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துயரத்தைத் தரும். இந்த குணத்தைத் தானே போக்கிக் கொள்ள முடியாது. அதை அழிக்க (மர்த்தனம்) வேண்டும். நவராத்திரியின் முதல் மூன்று நாள் வழிபாட்டில் அசுர குணங்களாகிய இருட்டையும், தமஸ் எனும் குணத்தையும் முற்றிலும் நீங்க பிரார்த்திக்கிறோம்.

அசுரர் யார்?

புராணக் கதைகளில் ஏதோ அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள் தேவி என்று படிக்கிறோம். அசுரர்களும் தேவர்களும் தனித்தனி இனம் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையான தத்துவம் அதுவல்ல. சாத்வீகம் என்பதும், நற்குணங்கள் என்பதும், ஆக்கப்பூர்வமான அறிவு என்பதும், தெளிவு (வெளிச்சம்) என்பதும் தேவர் குணம் எனப்படும்.

இந்த குணங்களும் தெளிவும் இல்லாத நிலை அசுரர் குறியீடு. இந்திரனே ஆனாலும், அசுர குணம் வரும்போது அவன் துன்பப்படுகிறான். அசுரனே ஆனாலும் தேவகுணம் தலையெடுக்கும்போது அவன் இன்பத்தை அடைகிறான். எனவே, குணங்களின் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமான சக்திக்கும் துர்கையை வணங்குகிறோம்.

ராகு காலத்தில் துர்க்கை

பொதுவாக ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை நிழல் அல்லது இருள் கிரகங்கள் என்பார்கள். ஒன்று தலை இன்னொன்று வால். ஒளியாகிய சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் வல்லமை பெற்றவை இந்த கிரகங்கள். எனவேதான் இவர்களால் சூரிய சந்திர ஒளி மங்குவதை “கிரகணம்” என்கிறோம். இந்த கிரகணம் நல்லறிவை செயல்படாது முடக்கும். இந்த முடக்கத்தை நீக்குவதுதான் துர்க்கை வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

வடக்கு வாசல் துர்க்கை

பெரும்பாலான ஆலயங்களில் வடக்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கி துர்க்கை சந்நதி இருக்கும். வைணவ ஆலயங்களிலும் துர்க்கை சில இடங்களில் உண்டு. துர்க்கையை கண்ணனின் சகோதரியாக சித்தரிக்கிறது நமது புராணங்கள். வடக்கு நோக்கிய துர்க்கை சந்நதிகள் இருப்பதால் வடக்கு வாசல் செல்வி என்று சொல்வார்கள். பராசக்தி என்றும் அவளுக்குப் பெயர். காளிதாசன், சியாமளா என்ற பெயரில் அழைக்கிறான். காளிதாசன் முதல் முதலில் இயற்றிய நூல் `சியாமளா தண்டகம்’. கேரள தேசத்தில் அவள் பகவதி என்று அழைக்கப்படுகிறாள்.

மகிமை நிறைந்த அவளை கிராமப்புற எளிய மக்கள் மகமாயி என்று அழைக்கின்றனர். எல்லா தாவரங்களையும் காப்பதால் சாகம்பரி என்றும் பெயர். நவராத்திரியில் துர்க்கையின் பேராற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக மகா சண்டி ஹோமம் விசேஷமாக நடத்துவார்கள். பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில், ஸ்ரீமகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

சகல ஐஸ்வர்யங் களையும் அள்ளி அள்ளித் தருபவள்

நவராத்திரியின் அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கு உரியது. மகாலட்சுமியை அலைமகள் என்று அழைக்கிறோம். பாற்கடலில் அவதரித்த தேவி மகாலட்சுமி பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் தோன்றின. அவைகளில் பலவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த பாற்கடலில் இருந்து மகாலட்சுமியும் அவதரித்தாள். அவள் உதித்த நாள் பங்குனி உத்திரத் திருநாள்.

`லஷ்மீம் ஷீர ராஜ சமுத்திர தனயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாசி பூத சமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த பிரமேந்திர கங்காதராம்
த்வாம் திரை லோக்ய குடும்பினிம் சரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்’
– என்ற ஸ்லோகம் இதை விவரிக்கும்.

நவராத்திரியின் இரண்டாம் மூன்று நாட்கள் செய்யும் பூஜைகள் அஷ்ட லட்சுமியின் அருளைக் குறித்துச் செய்யப்படுகின்றது. வீரத்தையும் வெற்றியையும் விரும்பிய நமக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளித் தருபவள் அல்லவா மகாலட்சுமி!

மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்

பண்டிகையின் மகிழ்ச்சி என்பது குணங்களின் மகத்துவங்களைச் செழுமையாக்குவது. ஒவ்வொரு பண்டிகையின் முடிவிலும் நம்முடைய ஆத்மார்த்தமான குணம் அதிகரித்து இருக்க வேண்டும். அதுதான் பக்தியின் விசேஷம். மகாலட்சுமியின் திருவருள் பெற வேண்டும் என்றால், நல்ல குணங்களும் பரோபகார சிந்தனையும் மனதில் அழுத்தமாக இருக்க வேண்டும். ஒருமுறை சுகப்பிரம்ம மகரிஷி மகா விஷ்ணுவைச் சந்தித்த போது பக்கத்தில் இருந்த மகாலட்சுமியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘அம்மா நீ யாரிடத்தில் பிரியமாக வசிப்பாய்?’’ என்ற அவர் கேள்விக்கு மகாலட்சுமி சிரித்தபடி பதில் தந்தாள். ‘‘இனிமையான பேச்சும், சாந்தமும், பணிவும், கிடைத்ததை பகிர்ந்து கொள்ளும் குணமும், பிறரை மதிக்கும் பண்பும், மனம் மொழி மெய்களில் தூய்மையும் யாரிடத்தில் உண்டோ, அவர்களிடத்தில் நான் நிரந்தரமாக இருப்பேன்’’ என்றாள். இந்த நற்குணங்கள் நவராத்திரி பூஜையின் போது ஓங்க வேண்டும். நற்குணங்கள் நிலைத்திருக்க பிரார்த்திக்க வேண்டும். “எண்ணம் போல் தானே வாழ்வு’’ என்பதை மறக்கக்கூடாது.

மாதுளம் பழம்

மகாலட்சுமிக்கு மாதுளம்பழம் பிடித்தமானது. நவராத்திரியில் இதனை நாம் விசேஷமாக நிவேதனம் செய்ய வேண்டும். இதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. பத்மாட்சன் என்ற அரசன் தவமிருந்தான். மகாவிஷ்ணு அவன் முன்தோன்றி, ‘‘என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘மகாலட்சுமியே குழந்தையாகப் பிறக்க வேண்டும்’’ என்று வரம் வேண்ட, மகாவிஷ்ணு ‘‘உன் எண்ணம் நிறைவேறும். இந்த மாதுளம் பழத்தைக் கொண்டு போய் உன் பூஜை அறையில் வைத்துக் கொள்’’ என்றார்.

மன்னனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பூஜை அறையில் வைத்து தினசரி பூஜை செய்தான். அது நாளுக்கு நாள் பெரிதானது. இதை அதிசயத்தோடு பார்த்தான் மன்னன். ஒருநாள் அது இரண்டாகப் பிளந்தது. அதில் ஒரு பக்கம் அழகான முத்துக்களும் ஒரு பக்கம் அற்புதமான பெண் குழந்தையும் இருக்க அதிசயத்தோடு அந்தக் குழந்தையை எடுத்தான். தாமரை மலர் போல் சிரித்த முகத்துடன் இருந்த அந்த பெண் குழந்தைக்கு பத்மை என்று பெயரிட்டான். இந்தக் கதையின் அடைப்படையில் மாதுளம் பழம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

தான்யம் தனம் பசும் பஹுபுத்ரலாபம்
ஸதஸம் வத்ஸரம் தீர்கமாயு:
என்ற மந்திரத்தை சொல்லித் துதிக்க, எல்லா செல்வங்களையும், தீர்க்கமான ஆயுளையும் கொடுப்பாள்.

என்னென்ன மலர்கள்? பட்சணங்கள்?

மகாலட்சுமிக்கு பிடித்த மலர்களையும் நிவேதனங்களையும் பற்றி பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக் கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது.

மிக முக்கியமாக பொங்கல், பால் பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை முதலிய கனி வகைகளைப் படைக்க வேண்டும். மிக முக்கியமாக தாமரை மலர்கள் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. வில்வமும் மகாலட்சுமிக்குப் பிடித்தமானது.

பார்கவி

மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று சாமானிய மன்னர்கள் மட்டுமல்ல ரிஷிகளும் விரும்புகிறார்கள். பிருகு மகரிஷி சாட்சாத் மகாலட்சுமி தனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும். அந்த குழந்தையை, தான் கண்ணும் கருத்துமாக வளர்த்து மகாவிஷ்ணுவுக்கு மாமனாராக இருந்து மணம் முடித்துத் தர வேண்டும் என்று தவம் செய்தார். அந்த தவத்தை உத்தேசித்து மகாலட்சுமி பிருகு மகரிஷியின் மகளாகத் தோன்றினாள். பிருகு புத்ரி என்பதால் குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார். மகாலட்சுமியை ரிஷிகள், மன்னர்கள் மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும் விரும்புகின்றார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் மேலும் செல்வம் வேண்டும் என்று பிரார்த்திக்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்?

செல்வன் யார்?

பொதுவாக செல்வத்தைச் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல; அது தவறானவர்களிடம்கூட, சமயத்தில், பூர்வ ஜென்ம வினையால் சேர்ந்துவிடும். அது மிக சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும். எது நிரந்தர, நீங்காத செல்வமோ அதைத் தர வேண்டும் என்று மகாலட்சுமியை பிரார்த்திக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் ராமாயணத்தில் லட்சுமணன் மரவுரி தரித்து ராமனோடு காட்டுக்குக் கிளம்பத் தயாராகின்றான். அவனை காட்டுக்கு போ என்று யாரும் சொல்லவில்லை.

மரவுரி தரிக்கவும் யாரும் சொல்லவில்லை. அவன் சகல சௌக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய இளவரசன். ஆனால், ராமனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று, எல்லாவற்றையும் உதறி விட்டுக் கிளம்பினான். இப்படிக் கிளம்பியதால் அசல் செல்வந்தன் ஆனான் என்ற பொருளில் ‘‘லஷ்மனா லஷ்மி சம்பன்ன: என்று அவனை ஸ்ரீமான் என்கிற பட்டம் கொடுத்து அழைத்தார்கள்’’. அவனுக்கு நிலைத்த செல்வமான கைங்கரிய செல்வம் கிடைத்தது.

அறிவைத் தருபவள் மகாலட்சுமி

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் முதலியவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர். வேதாந்த தேசிகர் ஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை. ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் இது.

`விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:’

‘‘உன் பார்வை விளையாட்டாய்கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒருக்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

தாயாரைச் சேவித்தீர்களா?

வைணவத்தில் மகாலட்சுமிக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த இடம் பகவானிடத்திலும், பாகவதர்களிடத்திலும் உண்டு. ஒரு கையால் நாராயணனையும் ஒரு கையால் அவன் அடியார்களையும் பிடித்துக் கொள்பவள் மகாலட்சுமி. பகவானின் வலது மார்பில் அமர்ந்தவள். பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவள். எனவே தான், எல்லா பெருமாள் கோயில்களின் வலப்புறத்திலும் மகாலட்சுமியினுடைய சந்நதி இருக்கும். அவளை தேவி என்றோ அம்பாள் என்றோ அழைக்கும் வழக்கம் இல்லை.

தாயார் (தாயாரைச் சேவித்தீர்களா? தாயார் சந்நதிக்கு சென்றீர்களா?) என்று அழைப்பார்கள். இந்த நவராத்திரி உற்சவம் பெரும்பாலும் எல்லா பெருமாள் கோயில்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து, பிராகார வலம் வந்து ஊஞ்சல் நிகழ்ச்சி நடத்துவார்கள். திருப்பதியில் நவராத்திரியை ஒட்டி நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு `நவராத்திரி பிரம்மோற்சவம்’ என்றே பெயர்.

ஆயுத பூஜை

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கு உரியது. இதில்தான் ஆயுத பூஜை என்னும் சரஸ்வதி பூஜை (மகாநவமி தினம்) வருகிறது. நவராத்திரி பூஜையிலேயே விசேஷமாக எல்லோரும் கொண்டாடும் பூஜை இது. தொழிலாளர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள், பெரிய நிறுவனம் நடத்துபவர்கள் என தொழில், வணிகம் இரண்டிலும் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் சரஸ்வதி பூஜை என்னும் ஆயுதபூஜை குதூகலமான விழா. புரட்டாசி மாதத்தில் வருகின்ற நவராத்திரிக்கு `சாரதா நவராத்திரி’ என்று பெயர். சரத் காலத்தில் நிகழ்வது (அக்டோபர்) என்பதால் சாரதா நவராத்திரி. `சாரதா’ என்ற திருநாமம் விசேஷமாக கலைமகளுக்கு உரியது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?