நன்றி குங்குமம் தோழி
பூக்களின் நறுமணம் நம்மிடையே நற்சிந்தனைகளை நல்லெண்ணங்களை எழுப்பும். எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று. எப்போதும் நம் கையில் ஆலயத்தில் அல்லது வீட்டில் பூஜித்த பூ பிரசாதங்களை வைத்திருக்க வேண்டும்.கோயில் பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாகவும் செயல்படுகிறது. மகான்களும் குங்குமம், அட்சதை போன்றவற்றை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். காரணம், அவர்களுடைய ஆசியை நேரடியாக பெறும் யோகசக்தி மனப்பக்குவமும் நமக்கு இல்லாததால் இடையில் புனித சக்தி நிறைந்த பூக்கள் பயன்படுகின்றன. பூக்கள் புனிதமானவை.
ஒவ்வொரு பூவும் நிறத்தால், மணத்தால், வண்ணத்தால் பலருக்கும் ஆனந்தம் தந்து கடைசியில் தானே காய்ந்து ஒரே நாளில் முக்தி அடைவதாய் ரிஷிகளும் யோகிகளும் சொல்கிறார்கள்.
பெண்கள் பூக்கள் சூடிக் கொள்வதும், பூ தொடுப்பதும் ஒரு புனிதமான காரியம். கட்டிய பூக்களை வாங்கி சூடிக்கொள்வதை விட உதிரிப்பூக்களை வாங்கி அதை தொடுப்பது ஒரு தவம். அதனால்தான் இன்றும் பல வீடுகளில் பூக்கள் வாங்கி தொடுப்பதை ஒரு தவமாக செய்து வருகிறார்கள்.இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பூக்களை நாமும் வாங்கி தொடுத்து இறைவனுக்கு சார்த்தி நாமும் தலையில் சூடி மகிழ்வோமாக.
தொகுப்பு: எஸ்.நிரஞ்சனி, சென்னை.