வேலூர்: ‘கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் பணம் வசூலிப்பவர்கள் பிச்சை எடுக்கலாம். பயனாளிகள் எந்த கொம்பனுக்கும் ஒரு பைசாவும் தராதீர்கள்’ என அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக கூறினார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா காட்பாடி அடுத்த சேவூரில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
நான் இன்று இந்த விழாவிற்கு வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அப்போது அவர், ‘கலைஞர் கனவு இல்லம் வீடு ஆணை ஒதுக்கீடு செய்வதற்கு பெரியவர்கள் சிலர் பணம் கேட்பதாக தகவல் வருகிறது. அவ்வாறு கேட்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தி சொல்லுங்கள்’ என்றார். கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடு கட்டுவதற்காக ஆணை பெற்று தருவதாக கூறி ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என சிலர் கேட்பதாக தகவல் வந்துள்ளது.
நீங்கள் யாராக இருந்தாலும், எந்த கொம்பனுக்கும் ஒரே ஒரு பைசா கூட கொடுக்கக்கூடாது. பயனாளிகளிடம் யாராவது பணம் கேட்டால் அதிகாரிகளுக்கோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் எனக்கு ஒரு போன் செய்தால் போதும். திங்கட்கிழமையில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வசூலிப்பவர்கள் இவ்வாறு செய்வதைவிட பிச்சை எடுக்கலாம். இவ்வாறு துரைமுருகன் ஆவேசமாக பேசினார்.