சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: வீரநாராயணர் கோயில், பெலவாடி. கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 30 கிமீ (ஹளபேடுவில் இருந்து 10 கிமீ) தொலைவில் உள்ளது.
காலம்: பொ.ஆ.1200ல் ஹொய்சாளப் பேரரசின் மன்னர் இரண்டாம் வீர வல்லாளரால் கட்டப்பட்டது.
‘ஏகசக்ரநகரம்’ என்று அறியப்படும் பெலவாடி, மகாபாரதத்தில் பாண்டவ இளவரசனான பீமன், பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்று கிராமத்தையும் அதன் மக்களையும் பாதுகாத்த இடம் என்று நம்பப்படுகிறது.
‘திரிகூடாச்சல’ (மூன்று சந்நதிகள்) அமைப்பு கொண்ட வீரநாராயணர் கோயில் பொ.ஆ.1200ல் ஹொய்சாளப் பேரரசின் மன்னர் இரண்டாம் வீர வல்லாளரால் கட்டப்பட்டது. இக்கோயில் அதன் கட்டிடக்கலை, அழகான மணி வடிவ (லேத் கடைசல் தொழில்நுட்ப) தூண்கள் மற்றும் நேர்த்தியான யானை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
கம்பீரமான கோயிலின் நுழைவாயிலும், அதன் இருபுறமும் செதுக்கப்பட்ட இரண்டு யானைகள் நம்மை வரவேற்கின்றன. சாய்வான கூரையுடன் கூடிய முன் மண்டபத்தினைக்கடந்து கோயிலுக்குள் நுழையும்போது மீண்டும் ஒரு ஜோடி யானைகள் நம்மை வரவேற்கின்றன. கோயிலுக்குள் செல்ல சில படிகள் நடந்தால், மறுபடியும் கம்பீரமான இரண்டு யானைகள் நம்மைக் கவர்கின்றன.
இந்த யானைகள் அனைத்தும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு, செழுமையான அலங்காரங்களுடன் மிகவும் யதார்த்தமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிகம் கூட்டமில்லாத அமைதியான சூழலைக் கொண்ட இந்த அழகுமிக்க கோவில், ஹொயசாளக் கட்டிடக்கலையில் ஆர்வமுள்ள எந்தவொரு கலை ஆர்வலரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம்.
கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று வரும் ‘வாழும்’ ஆலயம் இது. சற்று உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருப்பதால், 14 ஆம் நூற்றாண்டின் அன்னிய படையெடுப்பாளர்களால் இப்பகுதியின் பல ஹொய்சாள கோயில்களில் செய்யப்பட்ட அழிவு வேலைகளில் இருந்து இந்த அற்புதமான கோயில் தப்பித்தது.
தொகுப்பு: மது ஜெகதீஷ்