திருவனந்தபுரம்: மலையாள சினிமா கிரிமினல்கள் மற்றும் மாபியாக்களின் கையில் உள்ளது. படுக்கையை பங்கிட்டால் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது என்பன உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்து கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷன் அறிக்கை கடந்த 2019 டிசம்பரில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அறிக்கையை வெளியிட கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நேற்று வெளியிடப்பட்டது. 233 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் விவரங்கள் வருமாறு: யாராக இருந்தாலும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பங்கிட்டால்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. கிரிமினல்கள் மற்றும் மாபியாக்களின் கைகளில் தான் மலையாள சினிமா உலகம் உள்ளது. அவர்கள் தான் மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகின்றனர். சினிமா செட்டுகளுக்கு தனியாக செல்ல நடிகைகள் அஞ்சும் நிலை உள்ளது. இதனால் பலரும் பெற்றோர் உள்பட உறவினர்களை அழைத்துக் கொண்டுதான் செட்டுகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
கவர்ச்சி உடைகளை அணிந்தால் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இறுக்கமான உடைகளை அணிய நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நடிகைகளை பலரும் மிக மோசமான எண்ணத்துடன் அணுகுகின்றனர். படப்பிடிப்பு நடக்கும் போது ஓட்டல்களில் தனியாக தங்குவதற்கு பல நடிகைகளும் அஞ்சுகின்றனர். நடிகர்களின் ஆசைக்கு இணங்கா விட்டால் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. உடலை காண்பித்தால் தான் வாய்ப்பு என்ற நிலை மலையாள சினிமாவில் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒரு சுதந்திர அமைப்பு தேவை
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஹேமா கமிஷன் கேரள அரசிடம் சில சிபாரிசுகளை முன் வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு: பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் உயிருக்குப் பயந்து யாரிடமும் எதுவும் கூறுவதில்லை. இதுபோன்ற புகார்களை விசாரிப்பதற்காக மலையாள சினிமாவில் ஒரு புகார் கமிட்டி இருக்கிறது. ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடையாது. எனவே பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு ஒரு சுதந்திர அமைப்பை அரசு நேரடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கை சிபாரிசுகள் அமல்படுத்தப்படும் என்று கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறினார்.