வாஷிங்டன்: இந்து மதம் எனக்கு சுதந்திரத்தை தருகிறது. அதுதான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட எனக்கு ஊக்கமளிப்பதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி(38) குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விவேக் ராமசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஒரு இந்து. கடவுள் உண்மையானவர் என நம்புகிறேன். கடவுள் ஒரு நல்ல நோக்கத்துக்காக நம்மை இங்கே அனுப்பி உள்ளார். கடவுளின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு, அதை செயல்படுத்துவது நம் தார்மீக கடமை.
இந்து மதம் எனக்கு சுதந்திரத்தை தருகிறது. அதுதான் என்னை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கிறது. கடவுள் நம் அனைவரிடமும் இருக்கிறார் என்பதே நம் மதத்தின் அடிப்படை. அதனால் தான் நாம் அனைவரும் சமமாக இருக்கிறோம். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு மதத்தினருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமான நம்பிக்கை, மதிப்புகள், வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பேன்” என்று இவ்வாறு கூறினார்.