பெரம்பலூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சியால்தான் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது என்று அரசு பள்ளியில் நடந்த தமிழ்க்கூடல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சி தம்பிரான் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தமிழ்க்கூடல் என்ற தலைப்பிலான இலக்கியமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பட்டதாரி தமிழாசிரியை ராணி வரவேற்றார். பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் அம்மாப் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமர் பேசியதாவது: உலகின் மிக, மிக தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியே மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகும். உலகில் ஆறு மொழிகளுக்கு மட்டுமே செம் மொழி அந்தஸ்து உள்ளது.
பல்வேறு கட்ட போராட்டங்கள், கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்று க்குப் பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சியால்தான் தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனை 2004 செப்டம்பர் 17ம் தேதி அப்போதை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். 2000 ஆண்டுகள் பழமையான மொழிகளுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதிலும் தென் தமிழகத் தில் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு பின் உலகின் மிக தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட பகுதியாக தமிழகம் விளங்கியதை, புவியியல் ரீதியாக உறுதிப்படுத்தப் பட்ட நிலையில், தமிழ்மொழி 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. செம்மொழி அந்தஸ்து கொண்ட சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது.
ஆனால் தமிழ் மொழிக்கு தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை என இலக்கணங்களும், அகநானூரு, புறநானூறு, எட்டுத்தொகை, பத்துப் பாட்டு உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், உலகப் பொதுமறையாம் திருக்குறள் உள்ளிட்ட கலாச்சாரத்தை பண்பாட் டைப் பறைசாற்றுகிற இலக்கிய வளங்கள் ஏராளம் உள்ளது. தமிழ் மொழி தமிழ்நாட்டில் மட்டு மன்றி மலேசியா, சிங்கப் பூர், மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழி யாக அலங்கரித்து வருகிறது.
தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என சங்கங்கள் வைத்து அக் காலத்தில் தமிழை வளர்த்துள்ளனர். தமிழை வளர்க்க பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பிற மொழி கலப்பின்றி குறிப்பாக ஆங்கில மொழி கலப்பின்றி பேசவேண்டும்.
தமிழை பிழையின்றி பயன் படுத்த வேண்டும். ஒருவரோடு ஒருவர் பேசும் போதும் எழுதும் போதும் ஆங்கில வார்த்தைகள் இடம்பெறாமல் தூய தமிழையே பயன்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகளை கையாள வேண்டும்.
பாட புத்தகங்கள் மட்டுமன்றி மாணவ, மாணவியர் தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய, இலக்கண நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை படிக்க வேண்டும். அதன் மூலம் இளம் பருவத்திலேயே தமிழ் மீதான ஆர்வம் வளரும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பள்ளியில் தமிழ்க் கூடல் இலக்கிய நிகழ்வை யொட்டி நடத்தப்பட்ட ஓவியம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.