மேக்கப்… பெண்களின் அத்தியாவசியமான ஒன்று. கல்லூரி முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை அனைவரும் மேக்கப் செய்து கொள்கிறார்கள். கல்யாண மணப்பெண் அளவிற்கு இல்லை என்றாலும், பவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என அடிப்படை மேக்கப் இல்லாமல் வெளியே வருவதில்லை. மேக்கப், குறிப்பிட்ட சில மணி நேரம் தான் பளபளப்பான தோற்றத்தினை தரும். மேக்கப் இல்லாமல் என்றும் பளபளப்பாகவும், வயது குறைந்த தோற்றத்தினை பெற அழகியல் சிகிச்சை முறைகள் உதவுகிறது. இதன் மூலம் என்றும் அழகாகவும் இளமையுடனும் காட்சியளிக்க முடியும். அழகியல் சிகிச்சைகள் குறித்து சிறப்பு பயிற்சியினை ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி’ மையத்தின் நிறுவனரான சென்னையை சேர்ந்த அழகியல் நிபுணரான கன்னியம்மாள் அளித்து வருகிறார்.
“நான் இந்த துறைக்கு வரும் முன் மருத்துவத்துறையில் வேலைப் பார்த்து வந்தேன். மருத்துவத்துறை எனக்கு பிடித்த துறை என்றாலும் அழகுக் கலை மேல் தனிப்பட்ட விருப்பம் இருந்தது. அதனால் அழகுக்கலைக்கான பயிற்சியினை மேற்கொண்டேன். அழகுக் கலையில் மேக்கப் மட்டுமே இல்லாமல் அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினேன். அதனால் காஸ்மெடாலஜி டாக்டருடன் இணைந்து செயல்பட்டதால், பிரஸ்ட் என்லார்ஜ்மென்ட், லைப்போசக்சன் போன்றவற்றை பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அழகுக் கலை மற்றும் மருத்துவத் துறை இரண்டிலும் அனுபவங்கள் இருந்ததால், இரண்டையும் இணைக்கக் கூடிய துறையை குறித்த தேடலில் ஈடுபட்ட போது, அழகியல் (Aesthetics) பற்றி தெரிய வந்தது. இது அழகுக் கலையின் அடுத்தக்கட்டம் என்று புரிந்தது. அழகுக் கலையின் எதிர்காலம் என்பதால், அதனை முறையாக பயின்றேன். டிரைக்காலஜி மற்றும் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப் பயிற்சியினை மேற்கொண்டேன். அதனைத் தொடர்ந்து அழகியல் துறையை சார்ந்த பெர்மனென்ட் மேக்கப் குறித்தும் பயற்சி எடுத்தேன். பயிற்சிக்கு பிறகு அதற்கான சேவையில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்க விரும்பினேன். அதன் முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்டது தான் ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி மையம்’’ என்றவர் அழகியல் சார்ந்த பயிற்சிகள் குறித்து விவரித்தார். ‘‘எங்க மையத்தில் மெடிக்கல், பாராமெடிக்கல் மற்றும் non மெடிக்கல் என மூன்று வகையான பயிற்சிகளை வழங்குகிறோம்.
மெடிக்கல், எம்.பி.பி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, எம்.டி.எஸ் பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கான பயிற்சி. இந்தப் பிரிவில் ஏஸ்தெடிக் மெடிசன், ஏஸ்தெடிக் காஸ்மெட்டாலஜி, பெர்மனென்ட் மேக்கப் இன் காஸ்மெட்டாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரை காலஜியில் ஃபெலோஷி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரைகாலஜியில் முதுகலை டிப்ளமோ போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம். பாராமெடிக்கல் பிரிவில் காஸ்மெட்டாலஜியில் ஃபெலோஷிப், டிரைகாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் பெர்மனென்ட் மேக்கப்பில் அட்வான்ஸ்ட் மற்றும் டிப்ளமோவும், பெர்மனென்ட் மேக்கப் காஸ்மெட்டாலஜியில் முதுகலைப் பட்டப்படிப்பு வழங்குகிறோம். இதனை லேப் டெக்னீஷியன், செவிலியர், இயன்முறை மருத்துவர்கள், மருந்தாளர்கள் படிக்கலாம். மருத்துவம் அல்லாதவர்கள் அழகுக் கலை நிபுணர்கள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு பெர்மனென்ட் மேக்கப்பில் டிப்ளமோ மற்றும் தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் வழங்குகிறோம்.
ஒவ்வொரு துறைக்கு ஏற்ப தனிப்பட்ட பயிற்சிகள் உண்டு. உதாரணத்திற்கு ஃபெல்லோஷிப் அழகியல் பயிற்சியில் சருமத்தின் வகை, செயல்பாடு என சருமம் தொடர்பான அனைத்து அழகியல் சிகிச்சை குறித்து பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்கின் கண்டிஷனிங், கரும்புள்ளி நீக்கம், மீசோதெரபி, PRP, ஆன்டி ஏஜனிங், கெமிக்கல் பீலிங். தலைமுடி பொருத்தவரை ஹைப்ரீக்வென்சி, தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள், ஸ்டெம் செல் தெரபி, மைக்ரோநீடிலிங், தலைமுடிக்கான PRP தவிர டெர்மல் பில்லர்ஸ், திரெட்லிப்ட்ஸ், லேசர் சிகிச்சைகள், பாடிகான்டோரிங், பி.பி க்ளோ, கொரியன்கிளாசி, லிப் பிக்மென்டேஷன், மைக்ரோபிளேடிங் போன்ற பயிற்சிகளும் உள்ளது. இந்த பயிற்சிகள் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் மாறுபடும். மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியும். ஆனால் பாராமெடிக்கல் மற்றும் இல்லத்தரசிகளால் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் படிக்கும் அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியாது. காரணம் PRP போன்ற சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மட்டுமே செய்யகூடும். அதனை மற்றவர்களால் செய்ய இயலாது. மேலும் ஒவ்வொரு துறைக்கு என்ன பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை பாடத்திட்டங்கள் வாரியாக பிரித்து பயிற்சி அளிக்கிறோம். அழகுக் கலை நிபுணர்கள், இல்லத்தரசிகளுக்கு பெர்மனென்ட் மேக்கப், ஹைட்ரா ஃபேஷியல், பியூட்டிபீல்ஸ், மெடி ஃபேஷியல், மைக்ரோ பிக்மென்டேஷன், டெர்மா ரோலர், பிபி க்ளோ போன்ற பயிற்சிகள் உள்ளன’’ என்றவர் அழகியல் சிகிச்சையின் பலன்களை விவரித்தார்.
“அழகுக் கலை மற்றும் அறிவியலை இணைத்து இயற்கையான முறையில் ஒருவரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றி அமைப்பதுதான் அழகியல். சருமத்தில் உள்ள கொலாஜனை இயற்கை முறையில் ஊக்குவித்து சருமத்திற்கு புதுப்பொலிவு அளிக்க செய்யும். தலைமுடி வளர்ச்சிக்கும் அழகியல் நல்ல பலனைத் தரும். சிலருக்கு அடர்ந்த புருவங்கள் இருக்காது, அவர்கள் மைக்ரோபிளேடிங் மூலம் நிரந்தரமான அழகான புருவங்களை அமைத்துக் கொள்ளலாம். பிபி க்ளோ, மேக்கப் இல்லாமலே சருமத்தை பிரகாசிக்க செய்யும். அழகியல்தான் இன்றைய எதிர்காலம் என்பதால் டாக்டர்கள் உட்பட பலரும் இப்பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். இவை அனைத்தும் மருத்துவத்திற்கு இணையான சிகிச்சை முறைகள் என்பதால், முறையான உரிமம் பெற்று, லண்டனில் இயங்கும் அகாடமி ஆப் புரோஃபெஷனல் பயிற்சி மையத்துடன் (LAPT) இணைந்து செயல்பட்டு வருகிறோம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கான சான்றிதழும் LAPT மூலம் வழங்குகிறோம். மாணவர்களுக்கு சிகிச்சைக்கான இயந்திரங்களை முறையாக கையாளும் பயிற்சியினை அளித்து அவர்களை முழுமையான அழகியல் நிபுணராக உருவாக்குகிறோம். பயிற்சி முடித்தவர்கள் தனிப்பட்ட சிகிச்சை மையங்கள் அமைக்கவும் உதவி செய்கிறோம். எல்லாவற்றையும் விட ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட பதிவு எண் வழங்கப்படும். அந்த எண் இருந்தால் மட்டுமே அவர்களால் அழகியல் நிபுணராக செயல்பட முடியும்’’ என்றவர் அழகியல் சிகிச்சையான ஹைட்ரா ஃபேஷியல் குறித்து விவரித்தார்.
“அழகியல் துறையில் பல சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் அனைவரும் செய்து கொள்ளக்கூடியது தான் ஹைட்ரா ஃபேஷியல். டெட் ஸ்கினினை உரித்து சருமத்தின் அமைப்பினை மாற்றி அமைக்கும். சருமத்தில் உள்ள துளைகளை விரிவடைய செய்து கொலாஜின் உற்பத்தியினை அதிகரிக்கும். வறண்ட சருமத்திற்கு நீரோட்டத்தை அதிகரிக்கும், இளமையான தோற்றத்தினை கொடுக்கும். முகப்பருவினால் ஏற்பட்ட தழும்பு மறைய செய்யும்… இவ்வாறு பல பிரச்னைக்கான ஒரு தீர்வு தான் ஹைட்ரா ஃபேஷியல். பொதுவாக ஃபேஷியலை அழகு நிலையங்களில் கைகளால் செய்வது வழக்கம். அதையே இயந்திரம் மூலம் செய்யும் போது சருமத்திற்குள் ஊடுருவி சென்று அதிக பலனைக் கொடுக்கும். ஒவ்வொரு பிரச்னைக்கு என தனிப்பட்ட இயக்கங்கள் மற்றும் சீரம்கள் இயந்திரத்தோடு இணைக்கப்பட்டு இருக்கும். அதனைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த இயக்கங்கள் ஒவ்வொரு பலனை சருமத்திற்கு கொடுக்கும். வாக்கம் பிரஷர் முகத்தில் உள்ள பழைய சருமத்தை சுரண்டி எடுக்கும், கரும்புள்ளிகள், சரும சுருக்கம், கருவளையங்களை நீக்கும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். ஸ்கிரப்பர், இது கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க உதவும். வாக்கம் ப்ரஷர் பயன்படுத்தி இருந்தால் ஸ்கிரப்பர் பயன்படுத்த தேவையில்லை. முகப்பரு உள்ளவர்களுக்கு வாக்கம் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு ஸ்கிரப்பர் மட்டுமே பயன்படுத்தலாம். சருமம் தொய்வாக இருந்தாலும் ஸ்கிரப்பர் உபயோகிக்கலாம்.
RF ப்ரோப், சருமத்தில் உள்ள அழுத்தப்புள்ளியினை தூண்ட உதவும். அல்ட்ரா சவுண்ட் இயக்கம், சருமத்திற்கு இதமான சூட்டினை பரவ செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். சருமத்தினை குளுமையாக்கி சமநிலை படுத்த ஐஸ்பேக் ரிபேர். கடைசியாக LED மாஸ்க். இதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் சருமத்திற்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கும். கண்களுக்கு பாதுகாப்பு கவசம், முகத்தில் கொலாஜன் ஷீட் மாஸ்கினை அணிவித்த பிறகு தான் முகத்தில் LED மாஸ்கினை பொருத்த வேண்டும். LED மாஸ்கில் வெளியாகும் சிகப்பு நிறம் கொலாஜனை அதிகரிக்கும். நீலம், சருமத்தை வழுவழுப்பாக்கும். பச்சை, பிக்மென்டேஷனை நீக்கும். பர்பில், சரும மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மஞ்சள், மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தும். வெள்ளை, சரும அணுக்களை சீர்செய்யும்.
ஹைட்ரா ஃபேஷியல் அனைவருக்குமானது என்றாலும், ஒருவரின் தேவை மற்றும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப அதன் இயக்கங்கள் மற்றும் சீரம்களை மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும். சின்ன தவறு ஏற்பட்டாலும் அது சருமத்தை பாதிக்கும். அதனால் அனுபவம் உள்ள நிபுணர்களிடம் இந்த சிகிச்சை மேற்ெகாள்வது சிறந்தது. 30 வயதிற்கு மேல் சருமத்தை ஊட்டமளிக்கும் கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். அதனை சீர் செய்ய ஹைட்ரா ஃபேஷியல் சிறந்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். இதை முகத்திற்கு மட்டுமில்லாமல் உடல் முழுக்கவும் பயன்படுத்தலாம். இந்த சிகிச்சையினை தொடர்ந்து மூன்று முறையாவது எடுத்தால் தான் சிறந்த பலனை பார்க்க முடியும். ஒவ்வொரு சிகிச்சைக்குப் பிறகு போஸ்ட் கேர் மிகவும் அவசியம். சருமத்தை என்றும் பாதுகாக்கக்கூடிய சீரம்களை நிபுணர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சியும் நாங்க இங்கு அளிக்கிறோம். அழகியல் பயிற்சி பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் மேற்கொள்ளலாம். தற்போது சென்னையில் மட்டுமே பயிற்சி அளித்து வருகிறோம். வரும் காலங்களில் மேலும் கிளைகள் துவங்க இருக்கிறோம்’’ என்றார் கன்னியம்மாள்.
– ப்ரியா