Saturday, May 17, 2025
Home செய்திகள் தோற்றம் + சுறுசுறுப்பு = தன்னம்பிக்கை!

தோற்றம் + சுறுசுறுப்பு = தன்னம்பிக்கை!

by Porselvi

இளமைத் தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். மேலும் குறிப்பாக வேலையில், பொது இடத்தில் என இவையிரண்டும்தான் நம் தன்னம்பிக்கையை வளர்க்கும் முக்கியக் காரணிகள். நாற்பது வயதை கடந்த பின்னும் வயதான தோற்றத்திற்குரிய அறிகுறிகள் எட்டிப்பார்க்காமல் இளமைப் பொலிவோடு ஜொலிக்க வேண்டும் எனில் அதற்கேற்ப இயற்கையான அழகு பராமரிப்புகளை பின்பற்றலாம். இளமைத் தோற்றத்திற்கான அடித்தளம் உடலுக்கு எந்த அளவுக்கு ஊட்டச் சத்து கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஊட்டச் சத்து நிறைந்த அத்தகைய உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விரைவில் வயதான தோற்றம் எட்டிப் பார்ப்பதற்கான அறிகுறிகளை தடுத்துவிடலாம். சில ஆண்டுகள் கூடுதலாக இளமைத் தோற்றத்தை பராமரிக்கலாம்.

அவகோடா: அவகோடா பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கும், புற ஊதா கதிர் வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறந்தவை. கூடுதலாக கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும் பண்புகளையும், தோல் நெகிழ்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையும் அவகோடா கொண்டிருக்கிறது.

பெர்ரி: ஸ்டாபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி, போன்ற பெர்ரிவகை பழங்களில் ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன. இந்த பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், கொலஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஒட்டு மொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முக்கிய பங்கு வகிக்கின்றன.

ப்ளூபெர்ரி: ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்ட புளூ பெர்ரி வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடும் சக்திவாய்ந்தது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சி மற்றும் கே நார்ச் சத்து, மாங்கனீசு போன்றவை செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தும். பிரீரேடிக்கல் களின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்த உதவும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக சர்க்கரை நோயால் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு ப்ளூபெர்ரி சிறப்பான மருந்து.

கீரை மற்றும் காய்கறிகள் : கீரை, முட்டைக் கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ,சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்யவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதனால் வயதான அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதை தாமதப்படுத்தவும் செய்கின்றன. ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை போன்ற பழங்கள், புரோக்கோலி, இஞ்சி, லவங்கப்பட்டை உள்ளிட்டவையும் விரைவில் வயதாகும் அறிகுறிகளை விரட்ட உதவுகின்றன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளும்போது அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. செல்களை மாற்றுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் இது அவசியமானது. இளமைப் பொலிவை பராமரிக்கவும், வறண்ட மந்தமான சரும நிலையை மாற்றவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துணைபுரியும்.

தக்காளி: தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சுருக்கங்களின் அபாயத்தை குறைக்கவும் செய்யும். உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்வது இளமைப் பொலிவை பராமரிக்க உதவும். புற ஊதா கதிர்வீச்சினால் முன் கூட்டியே வயதாகும் நிலை ஏற்படுவதையும் தடுக்கும் தன்மையும் கொண்டது.

நட்ஸ்கள்: பாதாம், வால்நட்ஸ், ஆளி மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் இளமைச் சருமத்தை பராமரிப் பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

யோகர்ட்: புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் கொண்ட யோகர்ட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தோல் ஆரோக்கியத்துடனும், நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த புரோபயாடிக்குகள் இளமைச் சருமத்தை தக்கவைக்கவும் ஊக்குவிக்கும்.

மீன்: சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோல் நெகிழ்ச்சித்தன்மையும், நீரேற்றத்தையும் பராமரிக்க அவசியமானவை. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகின்றன.

கிரீன் டீ: பாலிபினால்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. கிரீன் டீயை தவறாமல் பருகுவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், தோல் நெகிழ்ச்சித் தன்மையையும் மேம்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவிடும்.
– அ.ப.ஜெயபால்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi