அழகாய் மிளிர்பவர்களை விரும்பாதவர் யார்? ஆனால் அழகுக்கலை பேஷன் மாடலிங் துறை குறித்த புரிதல்கள் மற்றும் சரியான வழிகாட்டுதல்கள் இங்கு இல்லை. அதனை உடைத்தெறியும் எங்களது சின்ன முயற்சி தான் எங்களது அழகு துறை சார்ந்த நிறைய முன்னெடுப்புகள் என்கிறார் இளம் அழகி சரிஹா. சென்னையை சேர்ந்த இளம் அழகி சரிஹா தற்போது பேஷன் மற்றும் அழகுக்கலை சார்ந்த நிறைய போட்டிகளை நடத்தி வருவதோடு தொழில் முனைவோர், ட்ராவலர், மனோதத்துவ நிபுணர் என பன்முக திறமையில் அசத்தி வருகிறார். சரிஹா சவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார். இவர் பேஷன் துறை மற்றும் அதன் சவால்கள், எதிர்கால திட்டங்கள் என தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
வேல்ட் யுனிவர்சல் புரொடக்சன் சார்பில் அமெரிக்காவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று, “மிஸ் வேர்ல்ட் யுனிவர்ஸ்” என்ற பட்டத்தை வென்றுள்ளேன் என்பதை பெருமையுடன் சொல்கிறேன் என தொடங்குகிறார் சரிஹா. இதனோடு ஸ்டார் ஐகான் ஆஃப் இந்தியா விருதுகளின் 7வது பதிப்பில்“யுனிவர்சல் ஸ்டைல் திவா” விருதும் கிடைத்தது பெரும் மகிழ்வான ஒன்று. வெற்றி வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்காக தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறேன் என்கிறார் சரிஹா. அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டது நல்ல அனுபவம் என்கிறார் இவர்.
சரிஹாவின் பயணம்….
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் சென்டர் பார் கவுன்சிலிங் டிப்ளமோ பட்டமும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைக்கோட்ராமாவில் சைக்கோட்ராமா பயிற்சிப் பட்டறைகள் மூலம் தனது தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்தியதோடு, பெங்களூரில் உள்ள என்எல்பி கோச்சிங் அகாடமியில் இணைந்ததன் மூலமாக 16 வயதிலேயே மிகச்சிறந்த நரம்பியல்-மொழியியல் பயிற்சியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
அழகி பட்டம் டூ தொழில்முனைவோர் அனுபவம் குறித்து…..
ஒரு இளம் ஆற்றல்மிக்க தொழில் முனைவோராக 2022 ஆம் ஆண்டு முதல் ஆழ்வார்பேட்டை மற்றும் டிரிப்ளிகேனில் உள்ள லிட்டில் மில்லினியத்தின் பங்குதாரராக இருக்கிறேன். ஷ்ரேயாவின் குளோபல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறேன். இதன் தலைமையின் கீழ், இந்த அகாடமி, குழந்தைகளுக்கான சர்வதேச பேஷன் வீக் ஆகியவற்றை நடத்தி வருகிறேன். இதுமட்டுமின்றி ட்ராவலராக ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சுற்றிய அனுபவங்கள் உண்டு. எனக்கு பேஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆர்வம் இருக்கிறது. அதற்கென s3 இன்டர்நேஷனல் என்கிற ஒரு நிறுவனத்தை துவங்கி அதன் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் மூலமாக நிறைய பேரை பேஷன் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்களும் ஆசைகளும் உண்டு. அதன் முதல்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
கனடா, இங்கிலாந்து போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அழகு மற்றும் பேஷன் துறைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. அதில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பேஷன் ஷோ நிகழ்ச்சிகள் என்பது மிகக் குறைவு. சென்னையில் இது போன்ற ஒரு பேஷன் சார்ந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட நாளைய பெருங் கனவுகளில் ஒன்று. அதன் மூலமாக நிறைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பேஷன் துறைக்கு வரவழைக்கும் ஒரு சிறிய முயற்சியாகதான் இதனை பார்க்கிறேன் என்கிறார் இளம் அழகி சரிஹா. இந்திய மக்களுக்கு பேஷன் துறை குறித்து நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய நவீனகால இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு அழகுக்கலை மற்றும் பேஷன் துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது. ஆனால் அதற்குமே நல்ல முறையான பயிற்சி மற்றும் நல்ல திறமை அவசியம் வேண்டும். அதற்கு தேவைப்படும் முன்னெடுப்புகளை பயிற்சிகளை தான் நாங்கள் வெற்றிகரமாக செய்து வருகிறோம் என்கிறார் இளம் அழகி சரிஹா சௌத்ரி. தமிழகத்தில் இருந்து நிறைய பேர் அழகுக்கலை சார்ந்த பேஷன் துறைக்கு ஆர்வமுடன் வரவேண்டும். வெளிநாடுகளில் சிறு வயதிலிருந்தே மாடலிங் மற்றும் பேஷன் துறையில் ஜொலிக்க துவங்கி விடுகிறார்கள்.
சிறப்பான ஒரு வெற்றிகளையும் வாய்ப்புகளையும் தரக்கூடியது பேஷன் துறை. கொஞ்சம் ஆர்வமும் நிறைய தன்னம்பிக்கையும் இருந்தால் சாதித்துவிடலாம். எங்களது வெற்றிக்கு தற்போது வரை முக்கிய காரணமாக இருப்பது எனது கடின உழைப்பும், காலந்தவறாமை மற்றும் நேர்மை போன்ற குணங்கள் தான். மேலும் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தாரின் உதவியுடன் தான் எனது துறைப்பயணங்களை தடையற தொடங்கி வெற்றிகரமாக பயணிக்க முடிந்தது. எனது அம்மாவும் இந்த நிகழ்ச்சிகளுக்கு உதவிகரமாக பல பணிகளை மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் பயணித்து அழகுக்கலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது ஆசை. எங்களது வெற்றிப்பயணம் இனிவரும் காலகட்டத்தில் சிறப்பாகவே அமையும் என தன்னம்பிக்கை நிறைந்த உணர்வுகளுடன் பேசுகிறார் இளம் அழகி சரிஹா.
– தனுஜா ஜெயராமன்.