* 5வது இடத்துக்கு முன்னேற்றம்
புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில், இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான 30வது லீக் ஆட்டம் நேற்று புனேவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் கருணரத்னே, நிசாங்கா பேட்டிங்கை தொடங்கினர். கருணரத்னே 15 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் அவர் அப்படியே களத்தில் நின்றார். அதனால் ஆப்கான் 3வது நடுவரிடம் மறுஆய்வுக்கு முறையீடு செய்தது. அதில் கருணரத்னே ஆட்டமிழந்தது உறுதியானது. அடுத்த நிசாங்காவும், கேப்டன் குசால் மெண்டிசும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அவர்களாலும் அதிக நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. அவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 62ரன் சேர்த்தனர். நிசாங்கா 46, மெண்டிஸ் 36 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த சமரவிக்ரமா மட்டும் கொஞ்ச நேரம் களத்தில் நின்று 36ரன் சேர்த்தார்.
ஸ்கோர் லேசாக உயர்ந்தாலும் விக்கெட்களும் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் இலங்கை 33வது ஓவரில் 4விக்கெட்களை மட்டும் இழந்து 157ரன் சற்று வலுவான நிலையில்தான் இருந்தது. ஆனால் அசலங்கா 22, டி சில்வா 14, மேத்யூஸ் 23, தீக்ஷனா 29, ரஜிதா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இடையில் கேப்டனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமீரா 1ரன்னில் ஆட்டழந்தது சோகம். அதனால் இலங்கை 49.3ஓவரில் 241ரன் சேர்ந்தது. மதுஷங்கா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் நின்றார்.ஆப்கான் தரப்பில் பரூக்கி 4, முஜீப் 2, அசமத்துல்லா, ரஷித்கான் தலா 1 விக்கெட் வீழத்தினர். அடுத்து 50 ஓவரில் 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. குர்பாஸ், இப்ராகிம் இணைந்து துரத்தலை தொடங்கினர். மதுஷங்கா பந்துவீச்சில் குர்பாஸ் டக் அவுட்டாக, ஆப்கானுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இப்ராகிம் 39 ரன், ரகமத் ஷா 62 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஹஷ்மதுல்லா – உமர்ஸாய் ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்க்க, ஆப்கான் 45.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஹஷ்மதுல்லா 58 ரன் (74 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), உமர்ஸாய் 73 ரன்னுடன் (63 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா 2, ரஜிதா 1 விக்கெட் வீழ்த்தினர். 3வது வெற்றியை பதிவு செய்து அசத்திய ஆப்கான் 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது.
* பட்டியலில் சேர்ந்த ஃபரூக்கி
உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்கள் அள்ளிய ஆப்கான் வீரர்கள் பட்டியலில் நேற்று ஃபரூக்கியும் சேர்ந்துள்ளார். அதன் படி முதல் இடத்தில் உள்ள முகமது நபி 2019ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 30ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். ஃபரூக்கி அதே இலங்கைக்கு எதிராக நேற்று 34ரன்களை தந்து அதே 4விக்கெட்களை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார். கூடவே 3வது இடத்தில் உள்ள ஷபூர் ஜார்டன் 2015ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 38ரன்னை அள்ளி தந்து 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.