மாமல்லபுரம்: உலக கடற்கரை தினத்தையொட்டி, மாமல்லபுரம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடந்த, 1992ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பூமி உச்சி மாநாட்டில் கனடா நாட்டு சார்பில் வலியுறுத்தப்பட்டு, பின்னர் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 2008ம் ஆண்டு முதல் ஜூன் 8ம் தேதி உலகம் முழுவதும் உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கடற்கரையை தூய்மைப்படுத்துவது, குப்பையில்லா கடற்கரையை உருவாக்குவது, குப்பைகள் கொட்டாமல் இருக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், கடற்கரை வியாபாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, கடற்கரையை தூய்மைப்படுத்தினர். இதனை தொடர்ந்து, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் குப்பைகளை கடற்கரையில் கண் மூடி தனமாக வீசி விட்டு செல்லாமல் ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டிகளில் போட்டு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். பின்னர், கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என பேரூராட்சி பணியாளர்கள், கடற்கரை வியாபாரிகள், தனியார் அமைப்பு சார்பில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
செய்யூர்: உலக கடற்கரை தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 14வது வார்டு பகுதிகளில் கடற்கரையை தூய்மைப்படுத்து நிகழ்ச்சி, பேரூராட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. இதில், பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணபதி, மன்ற உறுப்பினர்கள் வனஜா பாஸ்கர், தெய்வானை சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் கலந்துகொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், மன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரை பகுதியில் பல மாதங்களாக தேங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மீன் கழிவுகள், மரக்கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரும், கடற்கரையை தூய்மையாக வைத்திருப்போம், கடற்கரையில் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், கடல் உயிரினங்களை காப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நாவல், புங்கன், அரசன், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.