பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் தலைமை கோச் கவுதம் கம்பீர் இந்தியா திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்த டெஸ்ட் பகல் – இரவு ஆட்டமாக இளஞ்சிவப்பு பந்தைக் கொண்டு அடிலெய்டில் டிச.6ம் தேதி தொடங்குகிறது.
அதற்கு வசதியாக நவ. 30ம் தேதி தொடங்கும் 2 நாட்கள் பகல்/இரவு பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. பிரைம் மினிஸ்டர்-11 அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தன் குடும்பத்தினருடன் திடீரென நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, பிசிசிஐ அனுமதியுடன் கம்பீர் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், நியூசிலாந்து அணியுடனான தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால், கம்பீர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர் பேசாமல் இருப்பதே நல்லது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் கம்பீர் நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடிலெய்டில் நடைபெறும் பகல்/இரவு டெஸ்ட் ஆட்டங்களில் ஆஸிதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அங்கு இதுவரை நடந்த 7 பகல்/இரவு டெஸ்ட்களிலும் இந்தியா உட்பட எதிரணிகளை ஆஸி வீழ்த்தி இருக்கிறது. அதனால் அடிலெய்டு டெஸ்ட்டுக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் அப்போது உடன் இருக்க வேண்டிய கம்பீர் நாடு திரும்பி இருப்பது ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.