சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் காலம் முடிவடைவதற்குள், வழக்கத்துக்கு மாறாக கோடை மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் படிப்படியாக வெப்பம் குறைந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவானது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த குறைந்த காற்றழுத்தம், மேலும் வலுப்பெற்று வட தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து சென்று நேற்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதுமேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 25ம் தேதி வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதுதவிர இன்று, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.