சென்னை: வங்கக்கடலில் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்2 நாட்களுக்கு முன் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயல் ஹாமூன் வலுவிழந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் வங்கதேச கரையின் தெற்கு சிட்டகாங் அருகே கரையைக் கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக போடி நாயக்கனூரில் 50மிமீ பதிவாகியுள்ளது. இருப்பினும், ஈரோடு கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
தஞ்சாவூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், திருச்சி, திருவள்ளூர், வேலூர், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் மேற்கு வங்கக் கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து 31ம் தேதி வரையில் மழை தொடர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.