தூக்கணாங்குருவி (Baya weaver) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை இனம். கடுமையான முயற்சியால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள், நார்கள் போன்றவற்றைக்கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிக்கக்கூடியவை.ஊர்க்குருவி வம்சத்தைச் சேர்ந்த இது அளவிலும் உடலமைப்பிலும் ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால், இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது கூட்டமாகக் கூடி வாழும். முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டி குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும். கோடையில் கிணறு அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம்,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் மற்றும் மின் கம்பிகளிலும் இவை கூடு கட்டும்.
கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவவிலிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளம்கட்டி அதில் முட்டையிடும். இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண்ணை அப்பி அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்டி வைத்து அழகுபடுத்தும். தூக்கணாங்குருவி பொதுவாக 15 சென்டி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. ஆண் மற்றும் பெண் இரு பாலினமும் கூடு கட்டக்கூடியது. வால் பகுதி சிறியதாகவும் மேல்பகுதி தடித்தும் காணப்படும். தூக்கணாங்குருவி இரு வகைகளாக காணப்படும். ஒரு வகைக் குருவிகளின் மேல் பகுதி அடர் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்றொரு வகைக் குருவிகள் பழுப்புடன் கூடிய வெண்மைக் கோடுகளைக் கொண்டிருக்கும். இவை புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகளையும், வெட்டுக்கிளி, ஈக்கள், கரையான், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, சிலந்தி, சிறிய நத்தைகள், அரிசி தவளைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.