சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து வங்கக் கடலில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 60மிமீ மழை பெய்துள்ளது.
நாகர்கோயில், இரணியல், மாம்பழத்துறையாறு 50மிமீ, திருப்பதிச்சாரம் 40மிமீ, குளச்சல், ராமேஸ்வரம், ஒரத்தநாடு 30மிமீ, அடையாமடை, தக்கலை, குன்னூர், குழித்துறை, பூதப்பாண்டி 20மிமீ, மழை பெய்துள்ளது. இதற்கிடையே, ஈரோட்டில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்ப நிலை உணரப்பட்டது. சென்னை, கோவை, ஈரோடு, திருவள்ளூர், ராமநாதபுரம், வேலூர், மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உணரப்பட்டது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது அது மேலும் வலுப்பெற்று 23ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேற்கண்ட காரணங்களுடன் கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வட கிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும். இந்நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.