டெல்லி: நேற்று முந்தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்த பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, நேற்று காலை 08.30 மணி அளவில், தெற்கு மத்திய மகாராஷ்ட்ரா மற்றும் அதனை ஒட்டிய மரத்வாடா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வழுவிழக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் கரணமாக இன்று(26.05.2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிகு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.