ராமநாதபுரம்: தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு நேற்று தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 116வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா அவரது நினைவாலயத்தில் வரும் அக். 28ம் தேதி காலை ஆன்மீக விழாவாக யாகசாலை பூஜைகளுடன் துவங்கி, 29ம் தேதி அரசியல் விழா, 30ம் தேதி ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா, அரசு விழாவாக நடக்க உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அணிவிக்கப்பட்டது. அதன்படி அக். 30ம் தேதி நடக்கும் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்காக ஆண்டுதோறும் அக். 25ம் தேதி முதல் 31 வரை அணிவிக்கப்படுகிறது. இதற்காக அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோர் மதுரையிலுள்ள தனியார் வங்கியில் இருந்து தங்கக்கவசத்தை பெற்றனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் பசும்பொன் கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.