தண்டையார்பேட்டை: பேசின் பிரிட்ஜ்-கொருக்குப்பேட்டை இடையே சிக்னல் கோளாறால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் கழித்து ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில்கள் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பேசின் பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை வழியாக செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை 7.20 மணியளவில் பேசின் பிரிட்ஜ்-கொருக்குப்பேட்டை இடையே ரயில்வே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கும்மிடிப்பூண்டி சென்ற மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக இடையில் நிறுத்தப்பட்டன. சென்ட்ரலில் இருந்து சென்ற அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நின்றன.
தகவல் அறிந்த திருவொற்றியூர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பேசின் பிரிட்ஜ்-கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே ஏற்பட்ட சிக்னலை சரி செய்தனர். அதன்பிறகு விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்ற ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால் இந்த வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.
இதன் காரணமாக, தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். கொருக்குப்பேட்டை வழித்தடத்தில் அடிக்கடி இதுபோன்று சிக்னல் கோளாறு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினர்.