இருபத்தேழு நட்சத்திரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவற்றின் குணநலன்களைக் அடிப்படையாக கொண்டு மூன்றாக பிரித்துக் கொள்ளலாம். முதலில் டேக் இட் ஈசி ஸ்டார்ஸ் என்று இருக்கும் நட்சத்திரங்களாக பரணி, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், ஹஸ்தம், கேட்டை, மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி போன்றவை விளங்குகின்றன. அடுத்து சீரியஸ் ஸ்டார்ஸ்களாக அஸ்வினி, புனர்பூசம், பூரம், மகம், உத்திரம், கன்னிச் சித்திரை, அனுஷம், அவிட்டம், மிதுன மிருகசீரிஷம், கிருத்திகை போன்றவை இருக்கின்றன. டேக் இட் ஈஸியாகவும், இல்லாது மிகவும் சீரியஸாகவும் இல்லாமல் நியூட்ரலாக சில நட்சத்திரங்களாக மிதுன மிருகசீரிஷம், பூரம், துலாச் சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இதைத்தான் ராட்சசம், சாத்வீகம், தாமசம் என்று மூன்றாக ஜோதிடம் பிரித்து வைத்துள்ளது. அந்தந்த அலைவரிசை கொண்ட நட்சத்திரத்தோடு அவைகளை சேர்க்க வேண்டும் என்பதுதான் பொருத்தத்தின் அடிப்படையான விஷயம். டேக் இட் ஈசி நட்சத்திரக்காரர் ஜோக் அடித்தால் அதே நட்சத்திரக்காரர் கூடுதலாக விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கலாம்.
‘‘ஸார்… அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். உங்களை மாதிரி எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா‘‘ என்ன என்று சீரியஸ் ஸ்டார் உள்ளவர்கள் அவர்களுக்குள் சப்போர்ட் செய்வதை உற்றுக் கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்கு போயிட்டேன். ஆபீஸ்பத்தி நினைச்சு கூட பார்க்க மாட்டேன். எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் எல்லாத்தையும் ஆபிஸ்லயே மூட்டை கட்டி வச்சுட்டுதான் போவேன் என்று நீயுட்ரல் ஸ்டார் இருப்போர்கள் தங்களுக்குள் சொல்லி வைத்தாற்போல் பேசுவதை கவனித்திருக்கிறீர்களா. இதுபோன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை அலசி ஆராய்ந்து பொருத்தங்களாக வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இதுக்குத்தான் பொருத்தமா என்றும் கேட்கலாம். இல்லை. பள்ளியில் படிக்கும்போது அறுபது நண்பர்கள் புடைசூழ இருப்பீர்கள். காலேஜ் வரும்போது அதில் இருபது பேர்கள் நண்பர்களாக தொடர்ந்தால் அதுவே அதிகம். திருமணத்தின்போது அதில் ஐந்து பேர் நட்போடு வந்தால் அது ஆச்சரியம். நிறைய பேரிடம் எவ்வளவு பேசினாலும் பழகினாலும் கடைசி வரை அந்தரங்கமாக பேசுவதும், பழகுவது, விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் ஓரிருவராகத்தான் இருக்க முடியும். அதிலும் இறுதி வரை வருவது வாழ்க்கைத் துணை என்று வரும் ஒருவர்தான். பழகிப் பார்த்து நண்பர்களை புரிந்து கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கைத் துணையாக வரும் ஆணிடமோ, பெண்ணிடமோ பழகிப் பார்க்கிறேன். பிடிக்கிறது என்றால் மணம் செய்து கொள்கிறேன் என்று கூறமுடியுமா. நம் சமூக அமைப்புதான் ஏற்றுக் கொள்ளுமா? அதனால்தான் பொருத்தத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் வைத்திருக்கிறார்கள்.