கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நேற்று காலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள 18வது வார்டு செலுக்காடி பகுதிக்கு கடந்த மூன்று வருடங்களாக அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
இந்த வார்டுக்கு உட்பட்ட ஐந்து பிரதான சாலைகளில் நான்கு சாலைகள் பழங்குடியின மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள ஒரு சாலை ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் சாலையாகும்.
கடந்த மூன்று வருடங்களாக சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெற மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தும் பணிகள் நடைபெறவில்லை.
மேலும், இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பயன் எதுவும் இல்லை. குறிப்பிட்ட ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
18வது வார்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பாரபட்சம் காட்டப்படுகிறது என போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், வார்டு உறுப்பினர் சாய்பிரியா ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து செயல் அலுவலர் பிரதீப்குமார், டிஎஸ்பி வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி உள்ளிட்டோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக இரண்டு சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மீதமுள்ள சாலைகள் ஜூலை மாதத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கப்படும் என்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உறுதி அளித்ததாக பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் உரிய காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பொதுமக்களை திரட்டி மேலும் போராட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.