அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூர் அனந்தகிரி, காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). பனியன் நிறுவன மேலாளர். இவரது மனைவி சித்ரா (47), மகன் பிரவீன்குமார் (22). கோவிந்தசாமிக்கும், அவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் கோவிந்தசாமி மாயமானார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவிநாசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இதே பகுதியில் உள்ள தொரவலூர் குளத்தில் மிதந்த வெள்ளைச்சாக்கு கட்டிய அட்டை பெட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அதில், ஆண் ஒருவரின் நடுஉடல் பாகம் வெட்டிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அது கோவிந்தசாமியின் உடல் என்பது உறுதியானது. சம்பவத்தன்று கோவிந்தசாமிக்கும், அவரது தம்பி மகன் ரமேசுக்கும் இடையே சொத்து குறித்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தசாமியை, ரமேஷ் அடித்துக்கொன்றுள்ளார். பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரமேஷை கைது செய்தனர். தொடர்ந்து மற்ற உடல் பாகங்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


