புதுடெல்லி: இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகளில், ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இது 416 சதவீதம் அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்குப் பிறகும், கடந்த ஆறு ஆண்டுகளில் போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 291 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மிக அதிகம்.
மோடிஜி, உங்கள் அரசாங்கத்தின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் இருப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவில், 2016 நவம்பர் 8 அன்று இரவு பிரதமரால் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்திற்கு மோடி ஏற்படுத்திய முதல் பெரிய அதிர்ச்சி. அதிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளவே இல்லை. ரூ.2,000 நோட்டுகள் 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, அவற்றை புழக்கத்தில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பு 2023 செப்டம்பர் 30 அன்று திடீரென வெளியிடப்பட்டது. தற்போது இந்த நோட்டுகளில் 98.24 சதவீதம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பியுள்ளன. எவ்வளவு வீணான செயல். ஆனால் 2024-25 ல் போலி 500 ரூபாய் நோட்டுகள் 37 சதவீதம் அதிகரித்தன. ரூபாய் நோட்டு தடையால் கள்ளநோட்டு ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நினைவிருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.