சென்னை: வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் பணத்தை பிடித்தம் செய்வதா? ‘‘மகளிர் உரிமைத்தொகையில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை’’ என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதனையடுத்து, நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருப்பதாவது: மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் புதிய வங்கி கணக்குகள் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடைத்துள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என 6,500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 4.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 3.50 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டன. அதில் 24 மாவட்டங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தினால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைத்தொகை பிடித்தம் செய்யப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியானது. இதனை கவனத்தில் கொண்டு நிதித்துறை அமைச்சர் மூலமாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ‘‘இது மகளிருக்கான உரிமைத்தொகை இதிலே கை வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார்.