உளுந்தூர்பேட்டை: வங்கி பெண் அதிகாரி படுகொலை வழக்கில், அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த திருக்கோவிலூர் போலீஸ் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (32), இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
சடலத்தை கைப்பற்றி எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், ரமணியின் கணவர் அசோக் (34)தான் அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அசோக்கை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில், ரமணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் உள்ளிட்ட சிலரிடம் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் அவர்களிடம் உள்ள தொடர்பை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் கேட்காததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்துவந்த நிலையில், ரமணியின் செல்போன் எண்ணில் பேசியவர்கள் யார், யார் என்று ஆய்வு செய்தனர். இதில் தற்போது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நந்தகோபால், ரமணியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி திருக்கோவிலூர் எஸ்ஐ நந்தகோபாலை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.