திண்டிவன,: திண்டிவனத்தில் வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த சக்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துமாரி மகன் சண்முகபாண்டி(21). இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்ற சண்முகபாண்டி, நேற்று காலை திண்டிவனத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவர் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார்.
மாலை வரை அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், ஜன்னல் வழியாக திறந்து பார்த்தபோது வங்கி ஊழியர் சண்முகபாண்டி மின் விசிறியில் நைலான் கையிரில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று வங்கி ஊழியரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் தங்கும் விடுதியில், தனியார் வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.