புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் 1 சதவீத குறைப்பால் வங்கிகள் தங்கள் வைப்பு தொகை விகிதங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்கள் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த அளவை எட்டி உள்ளன. இது முதியவர்கள் மற்றும் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கிறது. ஏற்கனவே வங்கிகள் சாமானிய மக்களுக்கான கதவுகளை அடைத்து விட்டன. அவை பணக்கார முதலாளி நண்பர்களுக்கு மட்டுமே திறந்துள்ளது.
இது நாட்டு மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதி, ஏமாற்று வேலை. கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் சீரழிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீங்கள் எதையுமே செய்யவில்லை” என கடுமையாக சாடி உள்ளார்.