சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதியோர் உதவி தொகை, 100 நாள் வேலை திட்டம் போன்ற சேவைகளை ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக வங்கி வணிக தொடர்பாளர்கள் மேற்கொண்டு வந்தனர். வங்கி வணிக தொடர்பாளர்கள் வங்கிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தபோது, ஒரு முதியோர் ஓய்வூதிய தொகைக்கு ₹30 கமிஷன் வங்கிகளுக்கு தரப்பட்டது.
இதில், வங்கி கமிஷன் ₹6 ரூபாய் போக மீதமுள்ள ₹24-ஐ வணிக தொடர்பாளர்கள் பெற்று வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வங்கிகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதால், வணிக தொடர்பாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை ₹15ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு அரசு அளிக்காததன் காரணமாக, வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான கமிஷனை வங்கிகள் அளிக்கவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.