டெல்லி : நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 17,000 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சைபர் க்ரைம் குற்றச் சாட்டுகள் அதிகரித்து வண்ணம் உள்ளன. தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே ஆண்டில் ரூ.17,000 கோடி ஆன்லைன் மோசடி நடந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து 40 ஆயிரம் கணக்குகளும் பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து 10 ஆயிரம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. கனரா வங்கியில் இருந்து 7000 கணக்குகளும் தனியார் வங்கிகளில் இருந்து 11,000 கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அண்மையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி ஆன்லைன் தடுப்பு மோசடி நடவடிக்கைகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.