Friday, September 20, 2024
Home » ஏன் என் கைகளுக்கு வளையல் போடக்கூடாதா?

ஏன் என் கைகளுக்கு வளையல் போடக்கூடாதா?

by Porselvi

ஆடி கடை வெள்ளி – ஊஞ்சல் உற்சவம், 1008 விளக்கு பூஜை

சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் முட்லூர் முக்கூடல் சந்திப்பு என்று ஒரு இடம் வரும். ஒரு பாதை புதுச்சத்திரத்திற்கும், ஒரு பாதை பரங்கிப்பேட்டைக்கும் செல்லும். இதில் பரங்கிப்பேட்டை செல்லும் பாதையில், 400 மீட்டர் தொலைவில் சாலையின் இடதுபுறமாக உள்ளதுதான் பிரசித்திபெற்ற முட்லூர் புத்துமாரியம்மன் கோயில். இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். மிகுந்த வரப்பிரசாதி இந்த புற்றுமாரியம்மன். வருடா வருடம் ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக் கிழமையும், உற்சவம் நடைபெறும்.

அதில் முதல் 10 நாட்கள் கொடி ஏற்றத்தோடு பெருவிழா கொண்டாடப்படும். சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள். தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். இதில் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறும். மூன்றாவது வெள்ளிக்கிழமை, தீமிதி விழா கோலாகலமாக நடைபெறும். அன்று மட்டும் ஆயிரக் கணக்கில் கிராம மக்கள் ஒன்று கூடுவார்கள். மாலையில் அம்மனுடைய வீதி உலா தொடங்கும். பக்கத்தில் உள்ள கிராம வீதிகளில் வாண வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலாக் காட்சி நடந்து, கோயிலுக்குத் திரும்பும் பொழுது விடிந்துவிடும். தீமிதி நடந்த அடுத்தடுத்த இரண்டு நாட்கள் அரிச்சந்திரன் நாடகமும் அதில் ஒரு பகுதியான மயான காண்டமும் விடிய விடிய நடைபெறும்.

மக்கள் அதி ஆச்சரியமாக இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் காட்சி அற்புதமாக இருக்கும். இத்தனை நவீன காலத்திலும்கூட தமிழ் மரபுக் கலையான நாடகக் கலையைவிட்டு விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று (இந்த ஆண்டு 16.8.2024) அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறும். அப்பொழுது, இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து உடுக்கை அடித்து அம்மனை ஊஞ்சலில் உட்கார வைத்து, மாரியம்மன் தாலாட்டு உரத்த குரலில் பாடுவது பரவசமாக இருக்கும்.

இது ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி. இதைக் கேட்பதற்கு என்றே மக்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் பரம்பரைத் தர்மகர்த்தா முட்லூர் சீனு என்கிற ராமதாஸ் அவர்களிடம் இந்தக் கோயில் வரலாறை கேட்டபொழுது அவர் சொன்னார்;

“இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் அந்தக் காலத்தில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானவை. முதல் முதலில் நிலத்தில் ஒரு புற்று தானாக ஏற்பட்டதையும், அங்கே ஒரு அம்மன் சிலை இருந்ததையும் பார்த்தவர் என்னுடைய தாத்தா திரு.ராஜகோபால். அப்போது ஒரு சிலர் அந்த புற்றுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து படையல் போடும் வழக்கம் உண்டு. இந்த புற்றுமாரியம்மன் மகத்துவம் அப்பொழுது தெரியவில்லை. இந்தப் பகுதியிலே வளையல் போடுகின்ற சிலர்தான் அம்மனின் மகத்துவத்தைச் சொன்னவர்கள். அதற்கு அவர்கள் அனுபவம் காரணம்.

ஒரு முறை, புற்றுக்கு அருகில் உள்ள மரத்தடியில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு சின்ன பெண் ஓடிவந்து இரண்டு கைகளையும் நீட்டி, “எனக்கு வளையல் போட்டு விடுகிறீர்களா?’’ என்று கேட்க, சிறுபிள்ளை கேட்கிறதே என்று அவர்களும் உற்சாகமாக இரண்டு கைகளிலும் வளையல் போட்டு இருக்கிறார்கள். உடனே அந்தப் பெண் மகிழ்ச்சியோடு ஓடி இருக்கிறாள். பக்கத்தில் எந்த வீடும் இல்லை. இந்தப் பெண் இப்படி ஓடுகிறாளே, எங்கே ஓடுகிறாள் என்று இந்த வளையல்காரர்கள் அந்த பெண்ணோடு ஓடி வர, திடீரென்று இந்தப் புற்றில் அந்தப் பெண் மறைவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறார். அருகில் வந்து பார்த்த பொழுது, புற்றில் இரண்டு ஓட்டைகள் தெரிந்தன.

அந்த ஓட்டைகளின் வழியாக இவர்கள் போட்ட வளையல்கள் எல்லாம் காண இருந்தன. அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, புற்றுமாரியம்மன் ஒரு சிறு பெண் வடிவத்தில் தங்களிடம் வந்து வளையல் கேட்டு இருக்கிறாள் என்று வியந்து போயினர். ஊராரிடம் சொல்ல, அப்போதுதான் மாரியம்மன் மகத்துவம் புரிந்தது. இன்றும் சந்நதியில் அந்த ஓட்டைகளைக் காணலாம்.
அதற்குப் பிறகு அவர்கள் எப்பொழுது அந்தப் பகுதிக்கு போனாலும்கூட இந்தப் புற்றில் சில வளையல்களைப் போட்டுச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்தச் சம்பவங்களை எல்லாம் அறிந்த நிலத்தின் உறிமையாளரான எங்கள் தாத்தா, இந்தக் கோயிலை எப்படியாவது கட்ட வேண்டும் என்று நினைத்தார். அவர் காலத்துக்குப் பின், என்னுடைய தந்தையார் வேணுகோபால், ஒரு சிறிய தகர கொட்டகையாகப் போட்டு கோயிலை எழுப்பினார்.

புற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை தெற்கு பார்த்து இருந்ததை அப்படியே வைத்தார். அந்தப் புற்றில் கை வெளிப்பட்ட இரண்டு ஓட்டைகளையும் அப்படியே விட்டுவிட்டு மண் சுவர் எடுத்து கோயிலை எழுப்பினார். இந்தக் கோயில் இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. அவர்கள் வெள்ளிக் கிழமை, ராகு காலம், மற்றும் நாள் கிழமைகளில் வந்து இந்த அம்மனை வழிபட்டுச் சென்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் இந்த அம்மன் உடனடியாக நிறைவேற்றி வைக்க இப்பகுதி மக்கள் எந்த வேண்டுதலாக இருந்தாலும், இங்கு வந்து கோரிக்கையாக வைப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

அதனால் இந்த அம்மனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அதிகமாகியது. அதன் பிறகுதான், ஆடி மாதத்தில் 10 நாட்கள் பெருவிழாவாக எடுத்து தீமிதி உற்சவத்தோடு விழா நிறைவு பெறுவது போல் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த விழா தவறாமல் நடக் கிறது. தகரக் கொட்டகையில் இருந்த இந்தக் கோயிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் விரும்பியதால், பழைய அம்மன் சிலையோடு புதிய அம்மன் சிலை ஏற்பாடு செய்து, அது கிழக்கு நோக்கி இருப்பது போல் வைக்கப்பட்டு, கருவறை எழுப்பப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கும் நடைபெற்றது’’. என்று கோயிலின் கதையை விரிவாகச் சொன்னார் அதன் இன்றைய நிர்வாக அறங்காவலரான சீனு என்கிற ராமதாஸ்.

இப்பொழுது கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பெரிய வளாகமாக இருக்கிறது. கோயிலுக்கு முன்புறம் மகாமண்டபம் எழுப்பி இருக்கின்றனர். அங்கே நின்று அம்மனை வணங்கலாம். அம்மன், அதி அற்புதமாக காட்சி தருகின்றாள். கருவறை கதவுகளில் இரண்டு ஓட்டைகள் இருக்கின்றன. அம்மன் அந்த காலத்தில் கைநீட்டி வளையல்காரர்களிடம் வளையல் பெற்ற சாட்சியாக, இந்த துளைகள், கை நுழையும் அளவிற்கு விடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அம்மன் கோயிலுக்கு நேர் எதிரே, அரசமரமும், அந்த அரச மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டையும் இருப்பதை காண முடிந்தது. பிள்ளையாரும் வீற்றிக்கிறார். அடி மரம் இற்றுப் போயிருக்கிறது. சிமெண்ட் வைத்து பூசியிருக்கிறார்கள்.

வேறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்கள்.திருமணத்தடை உள்ளவர்களும், நாகதோஷம் உள்ளவர்களும், குழந்தை வரம் வேண்டும் திருமணத் தம்பதிகளும் இந்த இடத்தில் நாக பூஜையைச் செய்து, தொட்டில் கட்டி வேண்டிக் கொள்ளுகின்றனர். அவர்களுக்கு விரைவில் அம்மன் அருளால், கோரிக்கை நிறைவேறுகிறது. உடனே அவர்கள் வேண்டிக் கொண்டபடி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு நடத்தி, மாவிளக்கு போட்டு கூழ்வார்த்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதைக் காண முடிந்தது.

சற்று தூரத்தில் ஒரு சிறிய நவக்கிரக சந்நதியும் அமைத்திருக்கிறார்கள். நவக் கிரக சந்நதிக்கு நேர் எதிரே காலபைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், இந்த காலபைரவருக்கு விளக்கேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. காலபைரவருக்கு பக்கத்தில், ஒரு மிகப் பெரிய குளம் இருக்கிறது. விவசாயப் பகுதியான இந்தப் பகுதியில் கால்நடைகள் நீர் அருந்துவதற்காகவே இந்த குளம் தர்ம குளமாக அமைக்கப்பட்டிருப் பதாக அறங்காவலர் சீனு சொன்னார். அதன் நடுவில் ஒரு அழகான சிவன்சிலை இருக்கின்றது. மகா சிவராத்திரி அன்று இந்தத் திருக்குளத்தில் சிவனுக்கு விசேஷமான ஆராதனைகள் நடைபெறுகின்றன. நவகிரக கோயிலுக்கு பக்கத்தில் மணி மண்டபமும், அதன் நேர் எதிரே வாகன மண்டபமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

சந்நதிக்கு வடக்கு புறமாக, ராகுகால துர்க்கை காட்சி தருகின்றாள். இந்த துர்க்கைக்கு பக்கத்திலேயே ஐந்து தலைநாகத்தோடு ஒரு நாகபீடம் இருக்கின்றது. மக்கள் இங்கே ராகு காலத்திலும், வெள்ளிக் கிழமைகளிலும் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து தலை நாகத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான பேச்சியம்மன் திருவுருவத்தைக் காண முடிந்தது.

இந்த பேச்சி அம்மனுக்கு மட்டும், வருடத்திற்கு ஒரு நாள் அசைவம் படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட உணவு ஊர் மக்களுக்கு பிரசாதமாக கோயில் வளாகத்திலேயே வழங்கப்படுகிறது. இரவுப் பூஜையான இப்பூஜையில் அதிகம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. மக்கள் தங்கள் கோரிக்கைகளை இந்த அம்மனிடம் வைக்கின்றனர். அந்த கோரிக்கை நிறை வேறியவுடன், நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். கிருஷ்ணருடைய உருவம், தம்பதிகள் சேர்ந்த மாதிரி இருக்கக்கூடிய பொம்மைகள், தலை, கால்கள், கைகள் முதலிய அங்கங்களின் பொம்மைகள் என காண முடிந்தது. இது குறித்து அறங்காவலர் சீனு சொன்னபொழுது, “கால்களில் அல்லது கைகளில் பிரச்னை இருந்தால், இந்த அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.

அவள் அதை குணப்படுத்துகின்றாள். உடனே அடுத்த திருவிழாவில் அவர்கள் அந்த அங்கங்களை பொம்மையாகச் செய்து இங்கே வைத்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பிறந்தவுடன் தொட்டிலையும், கண்ணன் பொம்மையையும் நேர்த்திக் கடனாக வைக்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், இங்கே வேண்டிக் கொண்டு திருமணம் நடந்தவுடன் மாப்பிள்ளை பெண் ஜோடி பொம்மை களைக் கொண்டு வந்து வைக்கிறார்கள்.

இப்படி அந்தந்த நேர்த்திக்கடனுக்கு தகுந்த மாதிரி பேச்சி அம்மனுக்கு சமர்ப்பிக்கின்றனர். அப்படித்தான் நிறைய பொம்மைகளும் அங்கங்களும் இருந்ததைக் காண முடிந்தது. மிகச் சாதாரணமான ஒரு புற்றுக் கோயில், இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கிறது. அந்தப் பகுதி மக்களான புமுட்லூர், தீத்தான் பாளையம், ஆனையாங்குப்பம், சம்பந்தம் முதலிய சுற்று வட்டாரக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த அம்மனை குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொண்டு வழிபடுகின்றனர். திருவிழாக்கள் என்றால், அவர்கள் ஒன்றாக இங்கே கூடி விடுகின்றனர். அதைப் போலவே இந்த பகுதி வழியாக செல்லுகின்ற வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் கோயிலில் நிறுத்தி அம்மனை வேண்டிக் கொண்டு தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பயணம் வெற்றி பெறவும், வாகன விபத்து நடக்காமல் இருக்கவும் வேண்டிக் கொள்கின்றனர். இந்த பகுதி வழியாகத்தான் பரங்கிப்பேட்டைக்கு மீனவர்கள் காலையிலே மீன் கொள்முதலுக்குச் செல்வார்கள் அவர்கள் செல்லுகின்ற பொழுது இந்த அம்மனை வழிபட்டு செல்வதை வழக்க மாகக் கொண்டிருக்கின்றனர் எனவே, இந்த பகுதி மக்களுக்கு புற்றுமாரியம்மன் இஷ்ட தேவதையாகவும், குடும்பதேவதையாகவும் விளங்குவதை காணமுடிந்தது.

வழக்கமாக இங்கே பூஜையில் கலந்து கொள்கின்ற ஒரு அன்பரிடம் புற்று மாரியம்மன் பற்றிக் கேட்டதற்கு, அவர் ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் பதில் சொன்னார்;
“நம்பினார் கெடுவதில்லை. இந்த புற்றுமாரியம்மனை நம்பினார் கெடுவதில்லை. அந்த நம்பிக்கைதான் எங்களையும் இந்தக் கோயிலையும் இணைத்து வைத்திருக்கிறது’’ என்றார்.
உண்மைதானே. அம்மனின் திருமுகத்தைப் பார்த்தால், அந்த அற்புதமான புன்சிரிப்பு, “அவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று சொல்லாமல் சொல்வதைப் போல் இருக்கிறது.

முனைவர் ஸ்ரீராம்

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi