ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தான் சென்ற வங்கதேச அணி ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற முதல் வெற்றி இது. டெஸ்டில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்ததும் அதுதான் முதல் முறை. வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் ஆக.30ல் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடக்கவில்லை. 2வது நாளில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 26 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில்… லிட்டன் தாஸ் 138, மெஹிதி ஹசன் 78 ரன் விளாச 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
12 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், மழையால் பாதிக்கப்பட்ட 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்திருந்தது. ஜாகிர் ஹசன் 31, ஷத்மன் 9 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜாகிர் 40, ஷத்மன் 24, கேப்டன் நஜ்மல் உசைன் 38, மோமினுல் ஹக் 34 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் 56 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. முஷ்பிகுர் 22, ஷாகிப் ஹசன் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக லிட்டன் தாஸ், தொடர் நாயகனாக மெஹிதி ஹசன் மிராஸ் விருது பெற்றனர். வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தானை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்தது. பாகிஸ்தானுடன் 7 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள வங்கதேசம் முதல் முறையாக தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.