டாக்கா: வங்கதேசத்தில் நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் அவரது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து தப்பிய அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது நூருல் ஹூடா தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார். ஹசீனா ஆட்சியின் போது 2014, 2018 மற்றும் 2024 ஆகிய பொது தேர்தல்களின் போது நூருல் ஹூடா தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த முறைகேடு குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனா பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
நூருல் ஹூடா நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள உத்தாரா என்ற இடத்தில் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீ்ட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை வெளியே இழுத்து அடித்து உதைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தேர்தல்களில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.