டாக்கா: வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அரசின் தலைவராக முகமது யூனுஸ் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அங்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முக்கிய கட்சியான வங்கதேச தேசிய கட்சி போராட்டங்களில் ஈடுபட்டது. இதனிடையே நாட்டில் நிலைமை மாற்றத்துக்கான பொதுவான காரணத்தை கண்டறிய தவறியதால் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய குடிமக்கள் கட்சி தலைவர்களிடம் யூனுஸ் கடந்த வியாழன்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் அரசுக்கு முழுமையான ஆதரவு தராத நிலையில், பணியாற்றுவதில் உள்ள சிரமங்களை காரணம் காட்டி முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர் சில மணி நேரங்களுக்கு பின் வங்கதேச அரசின் இடைக்கால அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பின் திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத் கூறுகையில்,\\”வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நீடிப்பார். அவர் வெளியேறப்போவதாக கூறவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் நாங்கள் பல தடைகளை எதிர்கொண்டாலும் அவற்றை நாங்கள் கடந்து வருகிறோம். நிச்சயமாக யூனுஸ் தலைவராக நீடிப்பார். எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு முக்கியமானது. அந்த கடமையை கைவிட முடியாது. யாரும் எங்கும் செல்லவில்லை” என்றார்.