அய்ஸ்வால்: வங்கதேச அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது என பிரதமர் மோடியை சந்தித்த பிறகு மிசோரம் முதல்வர் லால்துஹோமா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் குகி – சின் என்ற பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலும் இந்த பழங்குடியின மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். வங்கதேசத்தில் புத்த மதம், கிறித்துவ மதத்தை பின்பற்றும் குசி – சின் பழங்குடியினத்தை சேர்ந்த சுமார் 40 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த இனத்தை சேர்ந்த குகி – சின் தேசிய ராணுவம் என்ற அமைப்பு தனி மாகாண கோரிக்கையை வலியுறுத்தி ஆயுத போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் கடந்த 2022 நவம்பர் முதல் வங்கதேச ராணுவத்துக்கும், குகி – சின் தேசிய ராணுவத்துக்கும் மிகப்பெரிய சண்டை நீடித்து வருகிறது.
குசி-சின் மக்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் மிசோரமில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுவதால் மிசோரமில் தஞ்சம் அடையும் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் மிசோரம் முதல்வர் லால்துஹோமா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் லால்துஹோமா வௌியிட்டுள்ள அறிக்கையில், “ சிட்டாகாங் பகுதியில் தஞ்சமடைந்துள்ள பழங்குடியின மக்களை நாடு கடத்தவோ, திருப்பி அனுப்பவோ முடியாது. வங்கதேச அகதிகளுடன் மிசோரம் மக்கள் இன ரீதியான பிணைப்பில் உள்ளனர். வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் தருவதில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.