புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய 2,000 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்ட நிலையில், மேலும் 2,000 பேர் தாமாக முன்வந்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடித்தனர். திரிபுரா, மேகாலயா, அசாம் எல்லை மாநிலங்களின் வழியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்ட விரோதமாக வங்கதேச மக்கள் ஊடுருவி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், நாடு முழுவதும் ஊடுருவிய வங்கதேச மக்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
அவர்களின் ஆவணச் சரிபார்ப்புகள் நடந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச மக்கள் நாடு கடத்தப்பட்டு இந்திய-வங்கதேச எல்லையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதே காலகட்டத்தில், இந்த கடும் நடவடிக்கையால் ஏற்பட்ட பயம் காரணமாக, கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான (2,000 பேர்) நபர்கள் தாமாக முன்வந்து எல்லையைக் கடந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் தான் முதன் முதலாக வங்கதேசத்தினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது நாடு கடத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் டெல்லி, அரியானா, அசாம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்களை இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் வங்கதேச எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.அவர்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வசம் ஒப்படைக்கப்படுவார்கள். பின்னர் எல்லையில் உள்ள தற்காலிக முகாம்களில் அவர்கள் வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் தேவைப்பட்டால் வங்கதேச நாணயம் வழங்கப்பட்டு, சில மணி நேர தடுப்புக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
திரிபுரா, மேகாலயா, அசாமில் இந்த நடவடிக்கை நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில், எல்லை கிராமங்கள் மற்றும் வீடுகளின் நடுவே செல்வதாலும், இரு பக்கங்களிலும் குடும்பத் தொடர்புகள் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதனால் திரிபுரா, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறது’ என்று கூறின.