வங்கதேசத்தில் நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், அங்கு பெண்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது ‘தவறான செயலாகும்’ என்று ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் வரும் 3ம் தேதி முதல் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தது. ஆனால் வங்கதேசத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை விளையாடுவது தவறான செயலாகும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்த நேரத்தில் அங்கு [வங்காளதேசத்தில்] விளையாடுவதை நான் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது, அது தவறான செயலாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். தற்போது வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை விட பெரிய காரணிகள் விளையாடுகின்றன. உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எங்களை பெரிதும் பாதிக்காது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
மேலும் பங்களாதேஷ் திட்டமிட்டபடி போட்டியை நடத்தும் என்ற நம்பிக்கையை இன்னும் தக்க வைத்துக் கொண்டாலும், யுஏஇ ஒரு மாற்று இடமாக உருவெடுத்துள்ளது. இந்தியா டி20 உலகக்கோப்பையை நடத்தும் என கூறப்பட்ட நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதனை மறுத்துள்ளார். டி20 உலககோப்பிக்கான மாற்று இடத்தை ஐசிசி நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.