டாக்கா: வங்கதேசத்தில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை ஏராளமானோர் பலியாகினர். அரசுக்கு எதிரான போராட்டங்களையடுத்து ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். நாட்டில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் பிரபல பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஆட்சி மாற்றத்தையடுத்து,ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஹசீனா மீது கொலை வழக்கு உள்பட 75 வழக்குகள் போடப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் ஷீரின் ஷர்மின் சவுத்ரி மற்றும் முன்னாள் அமைச்சர் திப்பு முன்ஷி ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச சுகாதார துறை ஆலோசகர் நுார்ஜகான் பேகம் டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். பின்னர் கூறுகையில்,‘‘வன்முறையில் 1000 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிசூட்டில் 400 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.