டாக்கா: அண்டை நாடான வங்கதேசத்தில் அரசு வேலைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமானதால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த 5ம் தேதி ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவுக்கு வந்து விட்டார். அதன் பிறகு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டத்தின் போதும் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து விலகிய பிறகும் நடந்த வன்முறைகளில் 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 11 வரை 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை 16 முதல் ஆக.4 வரை 400 பேரும், ஆக.5,6 ஆகிய 2 நாட்களில் மட்டும் 250 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐநாவின் நிபுணர்குழு நேற்று வங்கதேசத்துக்கு வந்தது. இந்த குழுவினர் ஒரு வாரம் தங்கியிருந்து விசாரிப்பார்கள்.