ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. ராவல்பிண்டி கிரிக்கெட் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரிஸ்வான் 171*, சவுத் ஷகீல் 141, அயூப் 56 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்திருந்தது.
நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 565 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (167.3 ஓவர்). முஷ்பிகுர் ரகிம் 191, ஷத்மன் 93, மிராஸ் 77, தாஸ் 56, மோமினுல் 50 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்துள்ளது. பாக். கை வசம் 9 விக்கெட் இருக்க இன்னும் 94 ரன் பின்தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.