சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகக் கூறி சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் மனு அளிக்குமாறு இந்து முன்னணி அமைப்புக்கு அறிவுறுத்தினார். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.