டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையையடுத்து கடந்த 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வௌியேறி தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து மாணவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ்(84) தலைமையில் இடைக்கால அரசு நேற்றுமுன்தினம் அமைந்தது. இடைக்கால அரசின் உறுப்பினர்களாக 15 பேர் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் உறுப்பினர்களுக்கான புதிய இலாக்காக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “முகமது யூனுஸ் பாதுகாப்பு, பொதுநிர்வாகம், எரிசக்தி, உணவு, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட 27 அமைச்சகங்களுக்கு பொறுப்பேற்றார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுசெயலாளர் அண்டோனியோ குட்டரசின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் வௌியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. எந்தவொரு இன அடிப்படையிலான தாக்குதல், வன்முறையை தூண்டுதல் போன்ற செயல்களை ஐநா ஒருபோதும் ஆதரிக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச நிலைமையை கண்காணிக்கவும், அங்குள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய – வங்கதேச எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படை(கிழக்கு) கூடுதல் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்தியா குழு ஒன்றை அமைத்துள்ளது.