ஜோத்பூர்: வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என்ற பேச்சுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆவேசமாக பதில் தெரிவித்தார். வங்கதேசத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், புத்தக வெளியீட்டு விழாவில், ‘பொதுவாக பார்க்கும் போது எல்லாம் சாதாரணமாகத் தோன்றினாலும், வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் நடக்கலாம்’ என்று கூறினார்.
இந்த கருத்துக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று ஜோத்பூரில் நடந்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற விழாவில் பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில்,’ வங்கதேசத்தில் நடந்தது போல் இந்தியாவிலும் நடக்கலாம் என்று சிலர் பேசுகிறார்கள். கவனமாக இருங்கள். நமது சுற்றுப்புறத்தில் நடந்தவை நம் பாரதத்தில் கண்டிப்பாக நடக்கும் என்று ஒரு கதையை புகுத்த நடக்கும் சிலரின் முயற்சிகள் ஆழ்ந்த கவலையளிக்கிறது. அப்படி எதுவும் இந்தியாவில் நடக்குமா என்று நீங்கள் தொடர்ந்து பார்த்து வாருங்கள்’ என்று பேசினார்.