புதுடெல்லி: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது. நேற்று சுதந்திர தின விழாவின்போது பேசிய பிரதமர் மோடி, வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் முதல் முறையாக நேற்று பிரதமர் மோடியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி தனது ஆதரவை தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச அரசின் தலைமை ஆலோசகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நிலவும் சூழல் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அவர் உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பல்வேறு மேம்பாட்டு முயற்சிகள் மூலமாக வங்கதேச மக்களுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கான இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். அந்தந்த தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் பொது செயலாளர் ஒபைதுல் குதர் ஆகியோருக்கு எதிரான இந்த கொலை வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த 4ம் தேதி சாத்மதாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின்போது அவாமி லீக் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதாகவும் அதில் ஆசிரியர் ஹுசைன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஹசினா மற்றும் ஒபைதுல் குதரின் உத்தரவுபடிதான் கொலை நடந்ததாக அவரது சகோதரர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.