டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பதவி விலகியதை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்றவரும், பொருளாதார நிபுணருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் சல்மான் எப் ரஹ்மான், சட்டத்துறை முன்னாள் அமைச்சர் அனிசுல் ஹக், சமூகநலத்துறை முன்னாள் அமைச்சர் திபு மோனி, முன்னாள் அரசின் தலைமை கொறடா ஏஎஸ்எம் பெரோஸ், முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜியாவுல் அஹ்சன் மற்றும் வங்கதேச உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்சுதின் சவுத்ரி மாணிக் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசயைில் தற்போது ஷேக் ஹசீனா அரசில் ஜவுளி மற்றும் சணல்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த கோலம் தஸ்தகிர் காஜியை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
மீண்டும் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை
மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கின. இதுகுறித்து இடைக்கால அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகர் முஹமது பவுசுல் கபீர் கான் கூறியதாவது, “மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் போராட்டத்தின்போது மிகவும் சேதமைடைந்த மிர்பூர்-10, காசிபரா மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது மூடப்பட்டிருக்கும்” என்றார்.