டாக்கா: வங்கதேசத்தில் விரைந்து தேர்தல் நடத்துமாறு இடைக்கால ஆட்சியாளர் முகமது யூனுஸுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இன்னொரு புறம் அந்நாட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளதாக உள்துறையினர் கொந்தளித்து வருகின்றனர். ஷேக் ஹசீனா வெளியேறியதற்கு பின் அமைந்த இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்ற முகமது யூனுஸ், இன்னும் தேர்தலை நடத்தாதது அங்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பருக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும் என ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம் டாக்காவில் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி பிரமாண்ட பேரணியை நடந்துள்ளது முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி. மேற்கொண்டு யூனுஸ் ஆட்சி தொடர்ந்தால் அது ஹசீனாவால் நாட்டுக்கு ஏற்பட்ட கேடுகளை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். BNP கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் முகமது யூனுஸ் முடிந்தவரை ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார் என்றும், இதன் காரணமாகவே சீர்திருத்தங்களை செய்ய இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது என சாக்குபோக்கு கூறிவருவதாகவும் எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சூழலில் வரும் ஆண்டு ஜூனுக்குள் தேர்தலை நடத்தப்போவதாக உறுதியளித்துள்ளார் முகமது யூனுஸ்.
மறுபுறம் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வழி செய்யும் புதிய சட்டத் திருத்தம் அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பல பகுதிகளில் நிர்வாகம் முடங்கியுள்ளது. இன்னொருபுறம் அரசின் பாராமுகம் காரணமாக தொழில்துறை முடங்கி விட்டதாகவும், பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் பெரும் பஞ்சம் நெருங்கி வருவதாகவும், அத்துறையின் கூறுகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு, உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களினால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் இன்னும் பல மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1971ம் ஆண்டில் நாடு உருவானபோது நிலவிய குழப்பங்கள் நெருக்கடிகள் தற்போது திரும்பியுள்ளதாவும் அவர்கள் கூறுகின்றனர்.